சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும் சிங்கப்பூர் ஏர்லைன்சும் மீண்டும் உயரத்தில் பறக்க ஆன அனைத்தையும் செய்வோம் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் பொருளியலுக்கு விமானப் போக்குவரத்தும் உலக நாடுகளுடனான தொடர்பும் அவசியம் என்றார் அவர்.
கொள்ளைநோய் பரவல் காரணமாக சாங்கி விமான நிலையமும் எஸ்ஐஏயும் ஏறக்குறைய முடங்கிக் கிடக்கின்றன.
இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது சாங்கி விமான நிலையம் மூன்று விழுக்காடும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நான்கு விழுக்காடும் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
விமானத் தொழில்துறை மீட்சியடைய சிலகாலம் பிடிக்கலாம் என்ற அவர், சாங்கியும் எஸ்ஐஏயும் மீண்டும் உயரத்தில் பறப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
போக்குவரத்து அமைச்சின் இருபது ஆண்டுகாலப் பயணத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூரில் நுழைவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி பயணப்பாதை இதர நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்தச்சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சுமார் 900க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு தனிமை உத்தரவு கிடையாது.
செப்டம்பர் 8ஆம் தேதியன்று திட்டம் அறிமுகமானது.
ஆரம்பத்தில் புருணை, ஜெர்மனி பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நிைறவேற்றுவதற்குப் பதிலாக பயணிகள் அனைவரும் நான்கு முறை கொவிட்-19 பல்படியத் தொடர்வினை(பிசிஆர்) சோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
"முதல் இரண்டு வாரத்திலேயே திட்டம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தது. இந்தப் பாதை வழியாக வந்த 900க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டாயச்சோதனைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளனர்.
"சிறப்புப்பாதை வழியாக வந்த பயணி களில் ஒருவருக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதையே இது காட்டுகிறது. சிங்கப்பூர் பாதுகாப்பாக திறக்கப்படுவது மிகவும் முக்கியம். சிங்கப்பூரின் பயணப்பாதை திறக்கப்படுவதை பல நாடுகளும் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றன," என்று அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

