மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தோ பாயோ லோரோங் 8ல் உள்ள ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம், கொவிட்-19 தொற்று எளிதில் பரவக்கூடிய இடமாக இருந்ததை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அப்பகுதி தொற்று பரவும் அபாயத்தில் இருந்தது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மூன்று பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் வீட்டிலிருந்து வேலை செய்ய இயலாதோர் பலர் உள்ளதாலும் அங்குள்ள உணவங்காடியில் அதிகமானோர் கூடுவதாலும் தொற்று அதிகரிக்கும் ஆபத்து அவ்விடத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்பு பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் லியோங் சான்-ஹுங் கூறுகையில், சிங்கப்பூர் முழுதும் சுற்றி வருபவர்களுக்கும் நகர்ப்புறங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் இந்த உணவங்காடி நிலையம் அமைந்துள்ள பகுதி ஒரு வழித்தடமாக இருந்தது. இந்த நிலையம் பிரபலமடைவதற்கு இதுவும் ஒரு காரணம். எனவேதான், இங்கு ஏராளமானோர் வந்துசெல்லும் இடமானது. ஆகவேதான் இங்கு தொற்றுப் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது," என்றார்.
பிராடல் சாலை மற்றும் மத்திய விரைவுச்சாலை - எல்லையில் உள்ள இரண்டு முக்கிய பாதைகள் - வாகனப் பணிமனைகள், பள்ளிகள் மற்றும் தொழில்துறைப் பகுதிகள் உள்ளன, இவை அனைத்தும் அப்பகுதியில் மக்கள் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியவை என்றார்.
அத்துடன் அங்கு குடியிருக்கும் மக்களின் அமைப்பும் கிருமிப் பரவலுக்கு ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அங்கு வாழும் பெரும்பாலோர் முதியவர்கள் அல்லது அவர்களால் பணியிட வேலையை வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலை உள்ளது என்றார் பேராசிரியர்.
ஏனெனில், கிருமிப் பரவல் குறித்து இங்குள்ள குடியிருப்பாளர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும்போல் சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவது அல்லது வேலைக்குக் கிளம்புவது போன்ற வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முதியவர்களோ, தாங்கள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தொற்று தங்களை அண்டாது என்று நினைக்கின்றனர். அப்பகுதியில் தொற்று அபாயம் உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று கூறினார் பேராசிரியர் லியோங். இவ்வாறான மனநிலையைக் கொண்டுள்ள முதியவர்கள், பாதுகாப்பு இடைவெளியைக் கடைபிடிப்பது, சரியான முறையில் முகக்கவசம் அணிவது போன்றவற்றில் அக்கறை செலுத்தாமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
தொற்று குழுமங்களாக உருவெடுத்ததற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக இந்த ஆய்வு கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது.
லோரோங் 8ல் உள்ள ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம் ஆகியவற்றில் 40க்கு மேற்பட்ட தொற்றுகள் தொடர்பிருந்தன. அதனையடுத்து சந்தையும் உணவங்காடியும் சுத்தம் செய்வதற்காக மூன்று நாட்கள் மூடப்பட்டன.

