கொவிட்-19 தொடர்பான செயல்பாடுகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்
நாளுக்கு நாள் சிங்கப்பூரில் அதிகரித்துவரும் கொவிட்-19 சம்பவங்களுக்கிடையே, கிருமித்தொற்று தொடர்பான செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் சிங்கப்பூர் செய்து வருவதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகள் நன்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதில் அரசாங்கம் மும்முரம் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
"கொவிட்-19 கிருமித்தொற்றால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது நெருக்கடியான ஒரு காலகட்டம் என்பதை நான் அறிவேன்," என்றார் அவர்.
"தற்போதைய நிலைமையால் தங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி குறித்து ஒரு சிலர் தமக்கு எழுதி இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்று இருப்பதை பரிசோதனை வழி உறுதிசெய்வதற்கும் மருத்துவமனைக்கோ சமூகப் பராமரிப்பு வளாகத்திற்கோ பின்னர் கொண்டு செல்லப்படுவதற்கும் இடையே காத்திருக்கும் நேரம் அதிகமாக இருப்பதாக கடந்த வாரங்களில் பலர் தெரிவித்திருந்தனர்.
கிருமித்தொற்று தங்களுக்கு இருப்பதை உறுதிசெய்த பின்னர், என்ன செய்வது என்று கேட்பதற்காக சுகாதார அமைச்சை அணுகியபோது, அமைச்சைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் வேறு சிலர் கூறியுள்ளனர்.
கொவிட்-19 சம்பவங்களுக்கான நிர்வாகப் பணிக்குழுச் செயல்பாட்டு (சிஎம்டிஜி) அலுவலகத்திற்கு பிரதமர் லீ நேற்று முன்தினம் சென்றிருந்தார்.
கொவிட்-19 நோயாளி என்று கண்டறியப்படும் ஒருவருக்குரிய முழு செயல்முறையையும் நிர்வகிக்கும் பொறுப்பை இப்பணிக்குழு ஏற்றுள்ளது.
நோயாளியைத் தகுந்த பராமரிப்பு வளாகத்திற்கு அனுப்புதல், போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தல், குறிப்பாக வீட்டில் இருந்தவாறு குணமடைவது போன்ற சூழல்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்று விளக்குதல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகிறது.
"சிஎம்டிஜிக்கு தரப்பட்டுள்ள பொறுப்பு, மிகவும் சவால்மிக்க ஒன்று. அதிவேகமாக மாறிவரும் சூழ்நிலையில் தொடர்ந்து 24 மணி நேரமாக அவர்கள் இயங்கி வருகின்றனர். கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
"நம் செயல்பாடுகளை விரிவுபடுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். நோயாளிகள் நன்கு பராமரிக்கப்படுவதையும் நாங்கள் உறுதிசெய்து வருகிறோம்," என்றார் திரு லீ.

