கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், நாளைமுதல் மருத்துவமனை படுக்கைப் பிரிவுகளுக்குள் வருகையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை, அக்டோபர் 23ஆம் தேதிவரை நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டது. சமூகத்தில் குறிப்பாக பதிவாகும் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இவ்வாறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மருத்துவமனைப் பணியாளர்கள், நோயாளிகள், வருகையாளர்கள் ஆகியோரிடையே கிருமித்தொற்று கண்டறியப்படுவதும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.
படுக்கைப் பிரிவுகள், வருகையாளர்களுக்கு மூடப்படுவதற்கும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் இது இட்டுச் சென்றது. இதனால், மருத்துவமனைப் படுக்கைகளுக்கான தேவையும் அதிகரித்துவிட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்க, கூடுதல் மருத்துவமனைப் படுக்கைகள் தேவைப்படுவதால், தற்போதைய நிலைமை அழுத்தத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
இந்நிலையில், குறிப்பிட்ட சில நோயாளிகளைப் பார்ப்பதற்கு வருகையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் இது அந்தந்த மருத்துவமனையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது. தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள், சிறார் நோயாளிகள், குழந்தை பிறக்கவிருக்கும் அல்லது பிறந்த பின்னர் சிகிச்சை நாடிவரும் தாய்மார்கள், பராமரிப்பாளர்களிடமிருந்து கூடுதல் ஆதரவு தேவைப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் ஆகியோருக்கு இந்த விதிவிலக்கு பொருந்தலாம்.
தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளியை, ஐந்து வருகையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவர். ஆனால் ஒரு சமயத்தில் நோயாளி அருகே அதிகபட்சம் இருவர் மட்டுமே இருக்க முடியும். நோயாளியைப் பார்ப்பதற்கு முன் 24 மணி நேரத்திற்குள் 'ஏஆர்டி' அல்லது 'பிசிஆர்' பரிசோதனை செய்து, கிருமித்தொற்று இல்லை என்பதை வருகையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இதற்கிடையே அவசரகாலப் பிரிவில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளை அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது. அதிக அபாயத்தில் உள்ள நோயாளிகள், கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயமாக ஆண்டிஜன் விரைவு பரிசோதனையை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் செய்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சு நேற்று அறிவித்தது. இது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
"அவசரநிலை அற்ற, மிதமான தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை நாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அமைச்சு வலியுறுத்தியது.

