மருத்துவமனைகளின், சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களின்மீதான சுமையைக் குறைப்பதற்காக, கொவிட்-19 நோயாளிகள் தங்களது வீட்டில் இருந்தவாறே குணமடைவது இப்போதைய இயல்புநிலையாக இருக்கிறது. இப்போதைக்கு, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோரில் 40 விழுக்காட்டினர் வரை வீட்டில் இருந்தபடியே குணமடைந்து வருகின்றனர். 80 வயதும் அதற்கு மேற்பட்டோர், 70 வயதிற்கு மேற்பட்டோரில் தடுப்பூசி போடாதோர், அல்லது வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்போர் ஆகியோர் மருத்துவமனைகளிலும் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களிலும் அனுமதிக்கப்படுவர். வீட்டில் இருந்தபடியே கொவிட்-19 தொற்றில் இருந்து மீள்வது தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்குச் சுகாதார அமைச்சு விடையளித்துள்ளது.
1) வீட்டில் இருந்தபடியே குணமடைவதற்கு யார் தகுதிபெறுவர்?
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட - 12 முதல் 69 வயதிற்குட்பட்டோர் - இலேசான அறிகுறிகள் இருப்போர் அல்லது அறிகுறிகளே இல்லாதோர் - கடுமையான வேறு உடல்நலக் கோளாறுகள் இல்லாதோர் - 80 வயதிற்கு மேற்பட்ட அல்லது கர்ப்பிணிகள், மிகவும் குறைவான நோயெதிர்ப்பாற்றல் உள்ளவர்கள், வேறு பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்போர் போன்ற எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள எவரையும் குடும்ப உறுப்பினர்களாகக் கொண்டிராதோர் - ஓர் அறையில், குறிப்பாக கழிப்பறை வசதியுடன் தனிமைப்படுத்திக்கொள்ள முடிவோர் ஆகியோர் தங்களது வீடுகளில் இருந்தபடியே கொரோனா தொற்றில் இருந்து குணமடையலாம்.
2) 'பிசிஆர்' பரிசோதனையில் எனக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. வீட்டிலிருந்தபடி குணமடைவதா அல்லது சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தில் இருந்தபடி குணமடைவதா என்பது தொடர்பில் இன்னும் யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. இப்படிக் காத்திருக்கும் நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?
அவ்வாறு காத்திருக்கும்போது, கொவிட்-19 நோயாளிகள் தங்களை ஓர் அறையில், அதிலும் கழிப்பறை வசதியுடன் கூடிய அறையில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படியும் அறையைவிட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். வீட்டில் இருந்தபடி குணமடையும்போது செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும். உடல்நலமில்லாததுபோல நினைத்தால், தொலைமருத்துவச் சேவை (telemedicine service) வழங்குநரை அழைக்கலாம். அச்சேவை வழங்குநர்கள் குறித்த பட்டியலையும் தொடர்பு எண்களையும் https://go.gov.sg/telemedicineproviders என்ற இணையப்பக்கத்தில் காணலாம். தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார அமைச்சின் நேரடி அழைப்பு எண்களைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அதிகமானோர் அவ்வெண்களை அழைக்கும்போது அவ்வமைப்பில் சேவைத் தடை அல்லது செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டிலிருந்தபடி குணமடைவோர்க்கான தோழமை அமைப்பை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கொவிட்-19 நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மின்னணுத் தனிமைப்படுத்தல் உத்தரவைப் (eQO) பெற https://go.gov.sg/quarantinereg என்ற இணையப்பக்கம் வழியே சுயமாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அவர்களும் பத்து நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான ஆணை வழங்கப்படும்.
3) எனக்கான இல்லப் பராமரிப்புத் தொகுப்பு இன்னும் கிடைக்கவில்லை. யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்?
வீட்டில் உயிர்வாயுமானி (oximeter) தேவைப்படாதோர்க்கு மட்டுமே இல்லப் பராமரிப்புத் தொகுப்பு விநியோகிக்கப்படும். அதன் தொடர்பில் ஏதேனும் கேள்வி இருந்தால் தங்களது இல்லப் பராமரிப்புத் தோழனை (home recovery buddy) அழைக்கலாம் (அம்முறை ஏற்படுத்தப்பட்ட பிறகு).
4) நான் மின்னணுத் தனிமைப்படுத்தல் உத்தரவு (eQO) பெற்றுள்ளேன். எனது குடும்ப உறுப்பினர்களும் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில், உணவு, மளிகைப் பொருள்கள், மருந்துகள் ஆகியவற்றை நான் எவ்வாறு பெறலாம்?
உணவையும் மளிகைப்பொருள்களையும் வீட்டிற்கே கொண்டுவந்து தரும்படி பணிப்பு (order) செய்யலாம். இல்லையேல், அதற்காக தங்களின் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரின் உதவியை நாடலாம். மருந்துப்பொருள்களை வீட்டிற்கே அனுப்ப வேண்டுமெனில், தொலைமருத்துவ சேவையை நாடலாம்.
5) நான் உணவு சேகரிக்க, உடை மாற்ற அல்லது குப்பையை அகற்ற வேண்டியிருந்தால் எனது குடும்ப உறுப்பினர்களை எப்படிப் பாதுகாப்பாக வைத்திருப்பது?
அப்பணிகளைச் செய்ய வேறு வழியே இல்லையெனில், தங்களது அறையின் வாயிலுக்கு அருகே தங்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லாததை உறுதிசெய்து கொள்ளவும். அறையின் கதவைத் திறக்குமுன் முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். வேலை முடிந்ததும் விரைந்து அறைக்குத் திரும்பிவிடுங்கள்.
6) நானும் என் குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளபோது 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகள் தீர்ந்துவிட்டன. அக்கருவிகளைப் பெற யாரைத் தொடர்புகொள்வது?
வீட்டில் இருந்தபடி குணமடைவோர் 'ஏஆர்டி' சோதனை செய்துகொள்ளத் தேவையில்லை. தனிமைப்படுத்திக்கொள்ளும் உத்தரவு பெற்றவர்கள், அதனைத் தொடங்குமுன் எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனைக்காக மருந்தகம் அல்லது பரிசோதனை மையத்திற்குச் செல்லும்போது அவர்களுக்கு 'ஏஆர்டி' பரிசோதனைத் தொகுப்புகள் வழங்கப்படும். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக அருகிலுள்ள கடைகளில் இருந்தும் வாங்கிவரச் சொல்லலாம்.
7) வீட்டிலிருந்தபடி குணமடையும்போது எனது உயிர்வாயுமானிச் சோதனை முடிவுகளை எங்கு பதிவுசெய்ய வேண்டும்?
வீட்டில் இருந்தபடி குணமடைவோர் தங்களது அன்றாட உடல்வெப்பநிலை, இதயத் துடிப்பு விகிதம், இரத்தத்தில் உயிர்வாயு அளவு ஆகியவற்றைக் குறித்து வைத்து, ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு https://go.gov.sg/homeisolationdailyreport எனும் இணையப்பக்கம் வழியாகப் பதிவிடலாம்.
8) எனக்குச் சில அறிகுறிகள் தோன்றின. என்ன செய்ய வேண்டும்?
உடல்நலமில்லாததுபோல் நினைத்தால் அல்லது கீழ்க்காணும் அறிகுறிகளில் ஏதேனும் மோசமானால், தங்களுக்கான தொலைமருத்துவச் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டுமென அவர் வழிகாட்டுவார்.
அறிகுறிகள்:
- காய்ச்சல் - இருமல், தொண்டை எரிச்சல், மூக்கு ஒழுகுதல், தலைவலி போன்ற கடுமையான சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் - தசைவலி அல்லது களைப்பு - வயிற்றுப்போக்கு
9) வீட்டிலிருந்தபடி குணமடைவதில் இருந்து எப்போது நான் விடுவிக்கப்படுவேன்?
வீட்டிலிருந்தபடி குணமடைவோர்க்கு விடுவிப்புக் குறிப்பாணை தேவையில்லை. பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக நினைத்தால், பத்தாம் நாளில் அவர் அந்த உத்தரவில் இருந்து விடுவிக்கப்படுவார். இப்போதைக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்பதால் அதன்பின் 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ளவும் தேவையில்லை.

