கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி வீட்டில் குணமடைந்து வருபவர்களில் சிலர், வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதில் ஏற்படும் சிரமம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சிடமிருந்து அறிவுறுத்தல் வரும்வரை குடும்ப உறுப்பினர்களிடம் கிருமியைப் பரப்பிவிடுவோமோ என்ற கவலையும் பலரிடையே எழுந்துள்ளது.
அந்தக் கவலைகளில் சிலவற்றுக்குத் தீர்வுகாண நிபுணர்களிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு பேசியது.
கேள்வி: நான் வீட்டிலிருந்து குணமடையும் வேளையில் எனது குடும்ப உறுப்பினர்களையும் ஆபத்தில் இட்டுச்செல்கிறேனா?
பதில்: அவர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருந்தால் ஆபத்து கிடையாது என்று டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் வீ எங் இயோங் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் குடும்ப உறுப்பினர்களிடையே கிருமிப் பரவலுக்கான சாத்தியம் குறைக்கப்படுவதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளதை அவர் சுட்டினார். மேலும், கடுமையான நோய்ப் பாதிப்பிலிருந்தும் தடுப்பூசி பாதுகாக்கிறது.
கேள்வி: என்னிடமிருந்து கிருமி தொற்றுவதில் எனது வீட்டிலிருக்கும் முதியோருக்கும் சிறுவர்களுக்கும் அதிக அபாயம் இருக்கிறதா?
பதில்: முதியோர் உட்பட தடுப்பூசி போட்டுக்கொண்ட குடும்ப உறுப்பினர்கள் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றிருப்பர் என்று பேராசிரியர் வீ கூறினார். எனினும், தகுதிபெறும் முதியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது சிறந்தது.
சிறுவர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குத் தொற்று ஏற்படுமாயின், பெரும்பாலும் அவர்களிடம் இலேசான அறிகுறிகளே தென்படுகின்றன என்பதை பேராசிரியர் வீ சுட்டினார்.
வீட்டில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பாற்றல் குறைவாக உடையோர் அல்லது பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் உடையோர் ஆகியோர் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவருக்கு வீட்டிலேயே குணமடையும் தெரிவு வழங்கப்படாது.
கேள்வி: என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டும்?
பதில்: வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குக் கிருமி தொற்றும் சாத்தியத்தைக் குறைக்க, கொவிட்-19 அறிகுறிகள் உடையோர் மற்றவர்களைவிட்டு முடிந்தவரை தள்ளியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் வீ அறிவுறுத்துகிறார்.
இது மிகவும் முக்கியம். ஏனென்றால், அறிகுறிகள் உடையவர்கள் இருமினாலோ தும்மினாலோ மற்றவர்களைக் கிருமி தொற்றும் அபாயம் இருக்கிறது.
"அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது பயனுள்ளதாக இருக்கும்," என்றார் பேராசிரியர் வீ.
கழிப்பறையைப் பகிர்வதால் கிருமி பரவும் அபாயம் அதிகரிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தலைவரான பேராசிரியர் டியோ யிக் யிங் கூறினார்.
கிருமி பரவும் சாத்தியத்தைக் குறைக்க, தொற்றுக்கு ஆளானவர் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, அடிக்கடி தொடப்படும் இடங்களை ஒவ்வொரு முறையும் கிருமிநாசினியைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
மேலும், கழிப்பறையில் காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்வதும் சிறந்தது என்று பேராசிரியர் வீ சொன்னார்.
கேள்வி: கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவருடன் ஒரே வீட்டில் வசிக்கும் எனக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?
பதில்: குறைந்தது இரு வாரங்களுக்குப் பொது இடங்களுக்குச் செல்வதை முடிந்தவரை குறைத்துக்கொள்ளும்படி பேராசிரியர் டியோ பரிந்துரைக்கிறார். இந்தத் தருணத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்ல நேரிட்டால், அதற்கு முன்பு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

