குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள், உதவி பெறவும் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் மேலும் எளிய வழிகளை நாடலாம். இதன் தொடர்பில் அமைக்கப்பட்ட பணிக்குழு அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ள நிலையில் அரசாங்கம் அவற்றைப் பரிசீலிக்க உள்ளது.
வன்முறைக்கு ஆளாவோரின் அனுமதி இல்லாமலும் சமூகநலப் பிரிவின் தலைமை இயக்குநர் போன்ற மூன்றாம் தரப்பினர், அவர் சார்பாக 'பிபிஓ' எனப்படும் தனிநபர் பாதுகாப்பு ஆணைக்கு விண்ணப்பிக்கலாம். மறுவாழ்வுக்கான உத்தரவுகளை மீறுவோர் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பணிக்குழு அதன் பரிந்துரையை முன்வைத்துள்ளது.
தற்போது சிறார், முதியோர் துன்புறுத்தல் சம்பவங்களைக் கண்காணிக்கும் குழு ஒன்று உள்ளது. திட்டத்தை விரிவுபடுத்தித் துன்புறுத்தப்படும் வாழ்க்கைத் துணைகளையும் பாதுகாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு அலுவலக நேரத்திற்குப் பின்னும் பாதுகாப்பு அளித்திட, சமூகச் சேவை நிபுணர்கள் கொண்ட அவசரநிலை செயல்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படலாம். காவல் அதிகாரிகளுடன் இக்குழு இணைந்து செயல்படும்.
குடும்ப வன்முறைச் சம்பவங்களை விசாரிக்கும் காவல் அதிகாரிகள், அவற்றைத் தகுந்த திறன்களுடனும் சரியான தகவல்களுடனும் கையாளப் பயிற்சியும் தேவை என்று பணிக்குழு குறிப்பிட்டுள்ளது. வன்முறையுடன் ஒருவர் செயல்பட்டதற்கு அவரது மனநலம் காரணமா என்பதைக் கண்டறிய, கட்டாய மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்கு அனுப்பப்படுவது தொடர்பில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவை குடும்ப நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என்றும் பணிக்குழு குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. மேலும், இவ்வாண்டு பெண்கள் தொடர்பான வெவ்வேறு விவகாரங்களை சிங்கப்பூரும் ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே, பணிக்குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த 2020 நிதியாண்டு நிலவரப்படி, குடும்ப வன்முறை தொடர்பில் இயங்கிவரும் சிறப்பு நிலையங்களில் தகவல் கேட்டு 4,574 கோரிக்கைகள் வந்ததாகக் கூறப்பட்டது. இது 2018 நிதியாண்டின் 2,906 கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையில், 57% அதிகரிப்பாகும்.
இந்த அதிகரிக்கும் போக்கு குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான சுன் ஷுவெலிங் கருத்துத் தெரிவித்தார். நிதி நெருக்கடி, ஒரே நெருக்குதலான இடத்தில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஆகியவற்றால் உணர்ச்சிபூர்வமான பாதிப்பு ஏற்பட்டு அது குடும்ப வன்முறைக்கு இட்டுச் செல்லலாம் என்றார் அவர்.
பணிக்குழு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அறிக்கையைப் பணிக்குழு அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதை அடுத்து, பரிந்துரைகள் வரும் வாரங்களில் ஆராயப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்: பக்கம் 3

