சிங்கப்பூரின் முதல் மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 சமூக சிகிச்சை வளாகம் (சிடிஎஃப்), நேற்று செயல்படத் தொடங்கியது. தெம்பனிஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வளாகத்திற்கு நேற்று நோயாளிகள் வரத் தொடங்கினர்.
சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து கொவிட்-19 நோயாளிகள் வெளியேற, அவர்களைத் தனிநபர் பாதுகாப்புச் சாதனம் (பிபிஇ) அணிந்திருந்த பணியாளர்கள் வரவேற்றனர்.
வாகனங்களின் ஓட்டுநர்களும் அதே 'பிபிஇ'யில் காணப்பட்டனர். என்டியுசி சுகாதார தாதிமை இல்லம் அமைந்திருந்த இடத்தில் புதிய 'சிடிஎஃப்' தற்போது செயல்படுகிறது. இங்கு 250 படுக்கைகள் உள்ளன.
நலமாக இருந்தாலும் அணுக்கமான கண்காணிப்பு தேவைப்படும் நிலையில் வேறு சுகாதாரப் பிரச்சினைகள் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு இந்தப் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
இதய, நரம்பியல், சுவாச நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோரை இந்த வளாகம் கண்காணிக்கும். அத்துடன் கிருமி தொற்றிய தாதிமை இல்லவாசிகளுக்கு, இங்கு வருவதற்கு முன்னுரிமை தரப்படும்.
தீவிர சிகிச்சை அல்லது கூடுதல் பிராணவாயு தேவைப்படும் நிலையில் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு அணுக்கமான கண்காணிப்பும் நிபுணத்துவ மருத்துவ கவனிப்பும் அவசியம். இவர்களுக்கு மட்டும் மருத்துவமனைப் படுக்கைகள் தயாராக இருப்பதை, இத்தகைய மேம்படுத்தப்பட்ட 'சிடிஎஃப்'கள் உறுதிசெய்யும் என்று கூறப்பட்டது.
தாதிமை இல்லங்களில் வழக்கமாக இருக்கும் மருத்துவ, தாதிமைப் பணியாளர்களைக் காட்டிலும் இந்த தெம்பனிஸ் வளாகத்தில் கூடுதல் ஆட்கள் இருப்பர். அத்துடன் இங்கு மருத்துவக் கண்காணிப்புச் சாதனங்களும் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.

