லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் பணியாற்றிய ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் இல்லாமல் செயல்பட்டதாகக் கூறப்படும் மூன்று நிலையங்களில் போலிசார் செப்டம்பர் 16ஆம் தேதிக்கும் 17ஆம் தேதிக்கும் இடையே சோதனை நடத்தியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உடற்பிடிப்பு நிலைய சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் அந்த நிலையங்களைச் சேர்ந்த ஒன்பது பெண் பணியாளர்கள் 22 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இந்தக் குற்றங்கள் என்ன என்பதை போலிசார் குறிப்பிடவில்லை. ஆயினும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
உடற்பிடிப்பு வர்த்தகத்தை உரிமமின்றி நடத்துவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

