அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டும் கூட முடியும்

அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டும் கூட முடியும்

1 mins read
96abd19a-039b-4175-b69a-3acc3ad6adf4
-

சிங்கப்பூரில் கொவிட்-19 வெகுவாக அதிகரித்துள்ள இந்நேரத்தில் வரும் திங்கட்கிழமை முதல், அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டும் கூட முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றும் அக்டோபர் 25ஆம் தேதியன்று அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு, நிலைமையைப் பொறுத்து மாற்றப்படும்.

புதிய விதிமுறைகளின் படி உணவகங்களில் அதிகபட்சம் இரண்டு பேர் வரை மட்டுமே உணவு உண்ண முடியும்.

கிருமித்தொற்றுகளால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள பளுவைக் குறைக்க இந்த கடினமான முடிவு தேவை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இன்று தெரிவித்தார். "இந்த அறிவிப்பு சிங்கப்பூரர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வருத்ததை அளிக்கும் என்பது எனக்குத் தெரியும். சிங்கப்பூர் மீண்டும் திறப்பதில் கடப்பாடு கொண்டிருப்பதாக நான் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்," என்று திரு கான் தெரிவித்தார்.

"பாதுகாப்பாக செயல்படவேண்டும் என்பதால் நம் பயணம் நிறைவடைய கூடுதல் காலம் ஆகலாம். இந்தக் கிருமித்தொற்று அலையையும் இனி வரும் அலைகளையும் சமாளிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் உங்களது பொறுமையையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமையன்று சிங்கப்பூரில் 1,500 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆயினும் இந்த எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் 3,200ஆக பெருக வாய்ப்பு உள்ளது.