அதிகமான கொவிட்-19 நோயாளிகள் வீட்டிலேயே குணமடையும் வகையில், அவர்களுக்குத் தேவையான உதவியும் ஆலோசனையும் வழங்கி ஆதரவளிக்கும் விதமாக, தொலைமருத்துவம், நேரடி அழைப்பு, 'தோழன்' (Buddy) முறை போன்ற சேவைகளை அதிகாரிகள் அதிகப்படுத்தி வருகின்றனர்.
நிலுவையில் உள்ள அத்தகைய உதவிக் கோரிக்கைகளை விரைந்து கையாள சிங்கப்பூர் ஆயுதப்படையினர் சுகாதார அமைச்சிற்குக் கைகொடுத்து வருகின்றனர் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அதன் இணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் தெரிவித்தார். கணிப்பைக் காட்டிலும் கொவிட்-19 பரவல் வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து, இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. வீட்டிலிருந்தபடி குணமடைவோரிடம் இருந்து பல புகார்கள் வந்தன. நேரடி அழைப்பு எண்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சிலர் தெரிவித்தனர். வேறு சிலர், அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற வெகுநேரம் காத்திருந்தததாகக் கூறினர்.
இப்போதைக்கு, கொரோனா தொற்றியோரில் 40 விழுக்காட்டினர்க்குமேல் வீட்டிலிருந்தபடி தேறி வருகின்றனர். அவர்களின் குறைகளைக் களைய எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் வோங் விளக்கினார். இல்லத் தனிமை உத்தரவின்கீழ் இருப்போரின் ஐயங்களைத் தீர்க்க, அவர்களுடன் 'டெலிகிராம்' செயலி வழியாகச் சுகாதார அமைச்சு இணைந்துள்ளது. வீட்டிலிருந்தபடி குணமடைவோர்க்கான நேரடி அழைப்புத் தொடர்புக் குழுவும் தொலைமருத்துவச் சேவைகளும் விரிவுபடுத்தப்படும்.
வீட்டிலிருந்தபடி குணமடைவோர் தொலைமருத்துவச் சேவைய நாடலாம். தங்களிடம் தோன்றும் அறிகுறிகள் போன்ற மருத்துவம் சார்ந்த அவர்களின் ஐயங்களுக்கு மருத்துவர்கள் விடையளிப்பர்.
அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளபோதும், அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துமுன் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்ததால் தேக்கநிலை ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

