சிங்கப்பூரில் வேலையிடங்களில் நிகழும் உயிர்ப்பலி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இங்கு 23 வேலையிட உயிர்ப்பலி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வேலையிட உயிர்ப்பலி விபத்துகளின் எண்ணிக்கை 16ஆக இருந்தது.
ஆகக் கடைசியாக நேற்று முன்தினம் துவாஸ் அவென்யூ 20ல் உள்ள துவாஸ் எரியாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.15 மணிக்கு நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் மாண்டார். இருவர் காயமடைந்தனர்.அந்த மூன்று சிங்கப்பூரர்களும் மின்சார விசையறையில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெடிப்பு நிகழ்ந்தது என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு அந்த எரியாலையிலிருந்து சுமார் 80 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள மின்சார விசையறையில் புகை சூழ்ந்திருந்தது என்றும் அந்த அறையில் உள்ள புகை வெளியேற்ற குழாயின் விசிறி மூலம் தீப் பற்றியிருக்கலாம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. வேலையிட உயிர்ப்பலி விபத்து கள் எண்ணிக்கை அதிகரிப்பு மிகுந்த கவலையை அளித்துள்ளது என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது முன்னர் கூறியிருந்தார்.
உயரத்திலிருந்து விழுந்தார்
இவ்வாண்டு ஜூன் 13ஆம் தேதியன்று 25 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்து மாண்டார். ஒரு கட்டடத்தின் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தபோது கிட்டத்தட்ட வீவக புளோக்கின் 14வது மாடி உயரம் அளவிலான 40 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தார். கட்டடத்தின் சுவர்களுக்கு இடையே போடப்பட்டிருந்த குறு கலான தற்காலிக பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பாதை இணைப்பு உடைந்தது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர் இவ்வாண்டு மே 19ஆம் தேதி ஒரு கப்பலின் எடை பாரத் தொட்டிக்குள் நுழைந்த ஊழியர் ஒருவரும் அவரது மேலதிகாரியும் அந்தத் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர். அங்கு போதிய அளவு உயிர்வாயு இல்லாததே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாதுகாப்பு உபகரணம் அணியாமல் அந்தத் தொட்டிக்குள் நுழைந்து மயங்கிய 21 வயது மேலதிகாரியைக் காப்பாற்ற அந்தத் தொட்டிக்குள் இறங்கிய 37 வயது ஊழியரும் மயங்கி விழுந்தார். இரு வரைக் காப்பாற்ற இறங்கிய மூன்றாவது நபரான 39 வயது ஊழியரும் மயங்கி விழுந்தார். ஆனால், அவர் விரைந்து காப்பாற்றப்பட்டதால் உயிர் பிழைத்தார்.
23ஆம் மாடியிலிருந்து விழுந்தார் இவ்வாண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, ரிவர் வேலி ரோட்டில் உள்ள கொண்டோமினியக் கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து அறைகலன் மற்றும் மின்சாரச் சாதனங்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த 23 வயது சிங்கப்பூர் ஊழியர், ஏணியிலிருந்து கால்தவறி விழுந்து மாண்டார்.
மின்தூக்கி சுரங்கத்தில் சிக்கினார் இவ்வாண்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று, நார்த் பிரிட்ஜ் ரோடு கட்டடத்தில் மின்தூக்கி பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்ட பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர், மின்தூக்கி தண்டவாளத்தில் சிக்கி உயரிழந்தார்.
துவாஸ் தொழிற்கூட வெடிப்பு இவ்வாண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று துவாஸ் ஸ்டார்ஸ் இன்ஜினியரிங் தொழிற்கூட வெடிப்பில் மூன்று ஊழியர்கள் மாண்டனர், பத்து பேர் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.
செப்பணிடுதலின்போது விபத்து இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று, டன்னர்ன் ரோட்டில் உள்ள ஒரு பங்களா வீட்டில் செப்பணிடும் வேலை நடந்துகொண்டிருந்தபோது, அதை மேற்கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் திரு கோ கோக் ஹெங், மாடித் தரையில் உள்ள குழியில் தவறி விழுந்து மாண்டார். அந்த 53 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி இரண்டாம் மாடியிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தார்.