அதிகமான மாணவர்களும் பணியாளர்களும் கட்டாய விடுப்பில் வைக்கப்படுவர்
தடுப்பூசி போட்டுக்கொண்டு இருந்தாலும் இல்லை என்றாலும் பாலர் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் நாளை 27ஆம் தேதி முதல் பாலர் பள்ளிக்குச் செல்ல அனுமதி இருக்காது என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கும் காப்பாளர்களுக்கும் தான் எழுதியுள்ள கடிதத்தில், சமூகத்தில் கிருமி பரவுவதை மட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
பாலர் பள்ளிகளை நிர்வகித்து நடத்துவதற்குத் தேவையான வருகையாளர்களும் அன்றாட நடைமுறைகளைச் செய்ய தேவைப்படுவோரும் மட்டுமே அக்டோபர் 24ஆம் தேதிவரை பாலர் பள்ளி வளாகங்களுக்குள் செல்லலாம்.
பாலர் பள்ளிகளில் தொற்றைக் கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் தொற்றுக் குழுமங்கள் ஏற்படாமல் தடுக்கவும் பலரும் கட்டாய விடுப்பில் வைக்கப்படுவர் என்று தெரிவித்த அந்த அமைப்பு, இதுவரையில் பாலர் பள்ளிகளில் ஏற்பட்ட தொற்று பாதிப்புகளுக்கு வீடுகளில் இருந்து கிருமி தொற்றியதே காரணம் என்றும் சுட்டியது.
வீட்டில் ஆறு மற்றும் அதற்குமேல் வயதுள்ள சிறார்களில் எவருக்கேனும் காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அல்லது பிள்ளைகளுக்கு இப்போதைய கடுமையான கட்டுப்பாடுகள் பொருந்தும்.
வீட்டில் யாருக்காவது விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று இருப்பதாகத் தெரியவந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறாருக்கும் ஊழியர்களுக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்க்கு 'பிசிஆர்' அல்லது 'ஏஆர்டி' பரிசோதனை மூலம் 'தொற்று இல்லை' என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர்கள் பள்ளிக்குத் திரும்ப முடியும்.
தனிமை உத்தரவை நிறைவேற்றி வருவோர், கிருமித்தொற்று நோயாளிகளுடன் தொடர்பு ஏற்பட்ட நாளில் இருந்து 11வது நாளில் மட்டுமே பள்ளிக்குத் திரும்பலாம். என்றாலும் அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது சளிமாதிரிப் பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
11ஆம் நாளில் இருந்து 14ஆம் நாள்வரை அன்றாடம் அவர்கள் 'ஏஆர்டி' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த அன்றாட சுயபரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியாத குழந்தைகள், 14ஆம் நாளுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பலாம்.

