துவாஸ் எரியாலை வெடிப்பு - காயமடைந்த மற்றொருவர் பலி

1 mins read
6c679938-e013-46b3-bf8f-05d2d5e35b14
-

துவாஸ் எரியாலையில் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 23ஆம் தேதி) நடந்த சம்பவத்தில் கடுமையாக காயப்பட்ட மற்றொருவர் உயிரிழந்தார். முதல் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டார்.

தேசிய சுற்றுப்புற அமைப்பு இந்த மரணத்தை உறுதி செய்தது. 59 வயது பொறியியல் நிர்வாகியாக இருந்தவர், காயங்களால் மாண்டதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. முதலில் உயிரிழந்தவரும் பொறியியல் நிர்வாகி. அவருக்கு 60 வயது.

கடுமையாகக் காயமடைந்த எஞ்சிய ஒரு 64 வயது பொறியாளர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காகப் போராடுகிறார்.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின்கீழ் செயல்படும் ஆலையில் மின்விசை அறை ஒன்றில் பராமரிப்புப் பணியின்போது வெடிப்புச் சம்பவம் நேர்ந்தது.

கிட்டத்தட்ட 80 பேர் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்துள்ளது. மேற்கூறிய மூவர் தவிர, மற்ற பணியாளர்களுக்கு ஏதும் ஏற்படவில்லை என்றது தேசிய சுற்றுப்புற அமைப்பு.

துவாஸ் அவென்யூ 20ல் அமைந்துள்ள ஆலையில், பிற்பகல் 3.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தாருடன் அன்றாடம் தொடர்பில் இருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. சம்பவத்தின் காரணத்தை ஆராய மனிதவள அமைப்பு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைப்பு கூறியது.

"விசாரணை தொடர்கிறது. இவை முடிந்தவுடன் மேல் விவரங்கள் தெரிய வரும்," என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.