சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதும் சுகாதாரப் பராமரிப்பு முறைக்குச் சுமை அளவுக்கு அதிகமாகக் கூடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதுமே முதல் காரியம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
ஆசியானுடன்கூடிய பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் விவியன் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டாக்டர் விவியன் நியூயார்க்கில் ஐநா பொதுப் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டார். அதையொட்டி அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார்.
ஆசியானுடன் கூடிய பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி கருத்துரைத்த அவர், மருத்துவச் சான்றிதழ்கள், தடுப்பூசிச் சான்றிதழ்கள் பரஸ்பரம் அங்கீகரிக்கப்படுவதற்குத் தீர்வு காண வேண்டி இருக்கிறது என்று தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பயணங்களுக்கு அனுமதி வழங்குவது எப்போது, எப்படி என்பதை தீர்மானிப்பது இரண்டாவது முயற்சியாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.
இதைப் பொறுத்தவரை இப்போதைக்கு கவனமாக நடந்துகொள்வதே சரியானதாக இருக்கும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அவர் சுட்டினார்.
அதேவேளையில், மருத்துவ வளங்களுக்கு அளவுக்கு அதிகமாக சுமை கூடுவதையும் தடுக்க வேண்டி இருக்கிறது என்று டாக்டர் விவியன் விளக்கினார்.
இவை எல்லாவற்றுடன் சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பதே தொடர்ந்து முக்கியமான முதல் பணி என்பதை தான் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதோடு சுகாதாரப் பராமரிப்பு வளங்களுக்குச் சுமை அளவுக்கு அதிகமாக கூடுவதையும் தவிர்த்துக்கொண்டு அவற்றைச் சாதித்த பிறகே எல்லைகளை மிக கவனமாக, மிகவும் பாதுகாப்பாக திறப்பது குறித்து யோசிக்கலாம் என்றார் அவர்.

