தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு; புதிதாக 2,236 பேர் பாதிப்பு

2 mins read
a1e57c8b-af78-48ff-ad7e-79db213579c3
சிங்கப்பூரில் ஒரே நாளில் ஈராயிரத்திற்குமேல் கொரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதன்முறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக 69 முதல் 79 வயதிற்குட்பட்ட ஆடவர் நால்வரும் 77 வயதான பெண் ஒருவருமாக மேலும் ஐவர் உயிரிழந்துவிட்டனர்.

அந்த ஐவரில் இருவர் முழுமையாகவும் ஒருவர் பகுதியளவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மற்ற இருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

அவர்கள் ஐவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதுவரை 85 பேர் அந்நோய்த்தொற்றால் மாண்டுவிட்டனர்.

குறிப்பாக, சென்ற மாதத்தில் 18 பேரும் இம்மாதத்தில் இதுவரை 30 பேரும் கொரோனாவிடம் உயிரைப் பறிகொடுத்துவிட்டனர்.

இதனிடையே, ஒருநாள் பாதிப்பு முதன்முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை ஈராயிரத்தைக் கடந்தது. புதிதாக 2,236 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முந்திய நாள் பாதிப்பைக் காட்டிலும் இது 589 அதிகம். இதனையடுத்து, மொத்த பாதிப்பு 91,775 ஆனது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் 1,711 பேர் சமூகத்தினர்; 515 பேர் தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். அத்துடன், வெளிநாட்டில் இருந்து வந்த பத்துப் பேர்க்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

உள்ளூரில் தொற்று கண்டோரில் 483 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள புளூ ஸ்டார்ஸ் தங்குவிடுதி தொற்றுக் குழுமத்தில் மேலும் 20 பேரை கொரோனா தொற்ற, அக்குழுமத்தில் கிருமி பாதிப்பு எண்ணிக்கை 401ஆக உயர்ந்தது.

அதுபோல், உட்லண்ட்ஸ் தங்குவிடுதி தொற்றுக் குழுமத்திலும் புதிதாக 40 பேரைக் கிருமி தொற்றவே, அங்கு மொத்த பாதிப்பு 216ஆகக் கூடியது.

அவ்விடுதிகளுக்குள்ளேயே கொரோனா பரவியது என்றும் அங்கிருந்து கிருமி வெளியில் பரவியதற்கான சான்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இப்போது கொவிட்-19 நோயாளிகள் 1,325 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 209 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோரில் 201 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்