கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முதியோர் அடுத்த நான்கு வாரங்கள் வீட்டிலேயே தங்கியிருப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறுபது வயது, அதற்கு மேற் பட்ட வயதுடையவர்கள் மற்றும் அவர்களுடன் வீட்டில் தங்கியிருப்போர் நிலைமை சீரடையும் வரை வீட்டில் தங்க வேண்டும்.
குறிப்பாக தடுப்பூசி போடாதவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பது பாதுகாப்பானது.
அண்மைக் காலமாக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் முதியோருக்கு தொற்று ஏற்பட்டால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை தெரிவித்தது.
முதியவர்களுக்கு தீவிர உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. கிருமித்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொற்று அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால் முதியோர், அத்தி யாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்த நான்கு வாரங்களுக்கு குழு நடவடிக்கைகளையும் சமூக ஒன்றுகூடல்களையும் முதியவர்கள் குறைக்க வேண்டும் என்று அந்த அறிக்கை நினைவூட்டியது.
உணவங்காடிகளில் சாப்பிடுவது போன்ற முகக்கவசங்களை அகற்றும் செயல்களில் ஈடுபடாமல் உணவை வாங்கிச்செல்ல முதியவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
"எல்லா நேரங்களிலும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை முதியவர்கள் சரியாக அணிய வேண்டும்.
"அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்," என்று முகவை ஆலோசனை வழங்கியது.
முதியவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் இதர நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
"கொவிட்-19 தொற்று ஏற்பட்டு லேசான அல்லது அறிகுறியே இல்லாமல் இருந்தால் மருத்துவமனைக்கு அவசரமாக ஓட வேண்டி யதில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்," என்று அறிக்கையில் முகவை வலியுறுத்தியிருந்தது
கடந்த இரு வாரங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கால்வாசி பேர் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.
இவ்வாண்டு மே மாதத்தில் இருந்து தடுப்பூசி போடாத 257 முதியவர்களுக்கு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டது.
சிலருக்கு உயிர்வாயு தேவைப்பட்டது. அப்படியும் சிலர் இறந்துவிட்டனர்.
இதனால் முதியவர்கள் உடனடி யாக தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்து கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம். தடுப்பூசி போட்ட முதியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று முகவை ஊக்குவித்தது.

