ஐந்து மில்லியனைத் தாண்டிய கொவிட்-19 மரணங்கள்

ஐந்து மில்லியனைத் தாண்டிய கொவிட்-19 மரணங்கள்

1 mins read
90256d61-08e0-44f4-89ff-05bd4f1bf271
அமெரிக்காவில் கொரோனா மரண எண்ணிக்கை 700,000ஐத் தொட்டுவிட்ட நிலையில், இறந்தவர்களை நினைவுகூரும்விதமாக வாஷிங்டன் நினைவுச்சின்னத்திற்கு அருகே நடப்பட்டுள்ள கொடிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டிவிட்டதாக 'ராய்ட்டர்ஸ்' பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

முதல் இரண்டரை மில்லியன் மரணங்கள் பதிவாக ஓராண்டு காலத்திற்குமேல் ஆன நிலையில், அடுத்த எட்டு மாதங்களுக்குள் மேலும் இரண்டரை மில்லியன் பேர் இறந்துவிட்டனர்.

ஆக அதிகமாக, அமெரிக்காவில் 700,000 பேர்க்குமேல் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர். பிரேசில், இந்தியா, மெக்சிகோ, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கண்ட அடிப்படையில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 21% தென்னமெரிக்கக் கண்டத்தில் பதிவாகியிருக்கிறது.

சென்ற வாரத்தில், உலகில் சராசரியாக நாளொன்றுக்கு 8,000 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தன. அதாவது, ஒரு நிமிடத்திற்கு ஐந்து பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவில் இதற்குமுன் இல்லாத அளவாக, நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 883 பேர் இறந்துவிட்டனர். அங்கு தகுதியுள்ளோரில் 33 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இன்னும் முதல் தவணை கொவிட்-19 தடுப்பூசியைக்கூட போட்டுக்கொள்ளவில்லை என்று 'அவர் வோர்ல்ட் இன் டேட்டா' தகவல் குறிப்பிடுகிறது.

இப்போதைக்கு 'டெல்டா' வகை கொரோனா கிருமியே உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள 194 நாடுகளில் 187ல் அக்கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்