பிரதமர்: மலேசியருக்கு டிசம்பரில் வெளிநாட்டுப் பயண வாய்ப்பு

பிரதமர்: மலேசியருக்கு டிசம்பரில் வெளிநாட்டுப் பயண வாய்ப்பு

2 mins read
d57a3bfc-9f52-43f7-bcbe-fc4c2d5a1600
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அருகே பெட்ரோனாஸ் டவர்ஸ் கட்டடங்கள் அருகே 'சலோமா லிங்க்' பாலத்தில் பொதுமக்கள் சிலர். படம்: இபிஏ -
Google News Preferred Icon

மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசி செயல்திட்ட இலக்கு நிறைவேறுவதைப் பொறுத்து டிசம்பரில் மக்கள் வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாகவே அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

கோலாலம்பூரில் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய செய்தித்தாட்களின் மூத்த ஆசிரியர்களுக்குப் பிரதமர் சிறப்பு பேட்டி அளித்தார்.

அது பற்றி மிங்குவான் மலேசியா செய்தி வெளியிட்டது.

"மலேசியா 90 விழுக்காடு தடுப்பூசி இலக்கை எட்டியதும் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் திறந்துவிடப்படும். மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யவும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்," என்று பிரதமரை மேற்கோள்காட்டி மலாய் மெயில் செய்தி வெளியிட்டு உள்ளது.

இதனிடையே, மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின், சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் பெரியவர்களில் 86 விழுக்காட்டினருக்கு முற்றிலும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் டிசம்பருக்கு முன்பே வெளிநாட்டுப் பயணம் சாத்தியமாகலாம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

இன்னும் இரண்டு வாரத்தில் அந்தத் தடுப்பூசி இலக்கு நிறைவேற்றப்படும் பட்சத்தில் அப்போதுகூட அனைத்துலகப் பயணம் அனுமதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.

எல்லைகள் திறக்கப்படும்போது 'மைடிராவல்பாஸ்' அனுமதிக்கு மக்கள் விண்ணப்பிக்க வேண்டிய தேவை இருக்காது என்றாரவர்.

என்றாலும் மலேசியாவுக்கு வருவோர் தனிமையில் இருக்க வேண்டிய நிபந்தனை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

முன்புபோல ஜோகூர் பாரு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு நாள்தோறும் சென்று வேலை பார்க்க அனுமதி கிடைக்கும் வகையில் சிங்கப்பூருடன் தமது அரசாங்கம் கலந்து பேசி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஜோகூருக்குச் சென்ற வாரம் தான் சென்றதாகவும் சிங்கப்பூருடன் பேசி பரஸ்பர பயண அனுமதி ஏற்பாட்டுச் செயல்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வழிகாணும்படி ஜோகூர் முதல்வரை தான் கேட்டுக்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்