புதுடெல்லி: அனைத்துலகப் பயணிகளுக்கு தனது எல்லைகளைத் திறந்துவிட இந்தியா முடிவுசெய்துள்ளது.
வரும் நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து, இந்திய உள்துறை அமைச்சு வெளிநாட்டவர்களுக்குப் புதிய சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும்.
வாடகை விமானங்கள் (Chartered flights) மூலமாக வரும் வெளிநாட்டவர்களுக்கு இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்தே சுற்றுப்பயண விசா வழங்கப்படும்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாட்டவர்களுக்குச் சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
"சுகாதார, குடும்ப அமைச்சு வெளியிட்டுள்ள கொவிட்-19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் விதிமுறைகளையும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பின்பற்ற வேண்டும்," என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அக்டோபர் 31ஆம் தேதிவரை அனைத்துலக விமானச் சேவைகளுக்கான தடையை இந்தியா நீட்டித்துள்ளது.
சுற்றுலா விசாக்களை வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருப்பது பயணத்துறையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் நற்செய்தியாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சுற்றுப்பயண விசாக்கள் வழங்குவதையும் உள்நாட்டு, அனைத்துலக விமானச் சேவைகளையும் இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

