மலேசியா: உள்ளூர், வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி

மலேசியா: உள்ளூர், வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி

1 mins read

மலே­சி­யா­வில் இன்று முதல் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டோர் இனி மாநி­லங்­களுக்கு இடை­யி­லும் வெளி­நா­டு­க­ளுக்­கும் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அந்­நாட்­டில் பெரி­ய­வர்­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

தடுப்­பூசி இயக்­கத்­தின் இலக்கு வெற்றி அடைந்­தது குறித்து நாட்டு மக்­க­ளுக்கு நேற்று உரை­யாற்­றிய மலே­சி­யப் பிர­த­மர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கிரு­மித்­தொற்று அதி­க­ரித்­தா­லும், படிப்­ப­டி­யாக அகற்­றப்­படும் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் நடப்­புக்கு வராது எனத் தெரி­வித்­தார்.

"வாழ்க்­கை­யும் வர்த்­த­கங்­களும் இயல்பு­நி­லை­யில் தொட­ரும்," என அவர் அனை­வ­ருக்­கும் உறு­தி­ய­ளித்­தார்.

"தொற்று எண்­ணிக்கை மீண்­டும் உயர்ந்­தா­லும் குறிப்­பிட்ட அம்­சங்­க­ளில்­தான் கட்­டுப்­பா­டு­க­ளைச் செயல்­ப­டுத்­து­வ­தில் கவனம் செலுத்­து­வோம். விதி­மு­றை­க­ளின்­படி செயல்­பட்­டால் முடக்­க­நிலை இருக்­காது என்­பதை உறு­திப்­ப­டுத்­த­லாம்," என்று அவர் தெரி­வித்­தார்.

தடுப்­பூ­சி­களை முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்ட மலே­சி­யர்­களும் அவர்­க­ளது பிள்­ளை­களும் உள்­நாட்­டி­லேயே பிற மாநி­லங்­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர். வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­ல­வும் அனு­மதி உண்டு. எனி­னும், மலே­சி­யா­வுக்­குள் வரு­வோர் 14 நாள் கட்­டாய தனிமை உத்­த­ர­வில் இருக்க வேண்­டும். முன்­ன­தாக, பணி அல்­லது படிப்பு போன்ற அத்­தி­யா­வ­சிய கார­ணங்­க­ளுக்­காக வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­ப­வர்­கள் 'மைட்­ரா­வல்­பாஸ்' திட்­டம் வழி­யாக அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

வெளி­நாட்­டுப் பய­ணி­களை அனு­ம­திப்­ப­தற்கு முன்­னர் அந்­தந்த நாடு­களில் தொற்று எண்­ணிக்கை, இறப்பு எண்­ணிக்கை, குண­ம­டை­தல் விகி­தம் போன்ற பல அம்­சங்­கள் கருத்­தில் கொள்­ளப்­படும் என்று இஸ்­மா­யில் சப்ரி கூறி­னார். பய­ணங்­க­ளைத் தொடங்­கு­வ­தற்கு முன்­னர் சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­ளு­மா­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார். சுய­ப­ரி­சோ­த­னையை மலே­சியா கட்­டா­ய­மாக்­க­வில்லை.