சாதனை அளவாக 96,000 பேர் பலன்

சாதனை அளவாக 96,000 பேர் பலன்

2 mins read

கோம்கேர் உதவித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு ஆக அதிகமானோர் நிதி உதவி பெற்றுள்ளனர்.

குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் கோம்கேர் அறக்கட்டளை நிதித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் பலனடைந்தோர் எண்ணிக்கை 96,040 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2005ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2021 மார்ச்சுடன் முடிவடைந்த நிதி ஆண்டில்தான் இந்த அளவுக்கு அதிகமானோர் உதவி பெற்றுள்ளனர்.

இது இதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 22 விழுக்காடு அதிகம். முந்திய நிதி ஆண்டில் 78,580 பேர் பலனடைந்தனர்.

மேலும், இதற்கு முன்னர் ஆக அதிமானோர் நிதி உதவி பெற்று பலனடைந்தது 2015 மார்ச்சுடன் முடிவடைந்த நிதி ஆண்டில்தான். அந்த ஆண்டில் பலன் பெற்றோர் எண்ணிக்கை 91,093.

நிதி உதவியாக கடந்த நிதி ஆண்டில் $236 மில்லியனை கோம்கேர் வழங்கி உள்ளது. இது இதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 56 விழுக்காடு அதிகம். முந்திய நிதி ஆண்டில் $151 மில்லியன் தொகை வழங்கப்பட்டது.

கோம்கேர் தொடங்கப்பட்டதில் இருந்து இப்போதுதான் ஆக அதிகமான தொகை உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

கோம்கேரின் 'எஸ்எம்டிஏ' என்று அழைக்கப்படும் குறுகிய காலம் முதல் இடைப்பட்ட காலம் வரையிலான உதவித் திட்டத்தில் இடம்பெற்றோரின் எண்ணிக்கையில் காணப்பட்ட கணிசமான உயர்வு மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வேலைதேடுவோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் இதர காரணங்

களால் பாதிக்கப்பட்டோரின் இக்கட்டான காலகட்டத்திற்கு இந்த 'எஸ்எம்டிஏ' திட்டம் உதவிக்கரம் நீட்டியது. இத்தகையோருக்கு இத்திட்டம் தற்காலிக நிதி உதவியை வழங்குகிறது.

கடந்த ஆண்டு 80,449 தனிப்பட்டவர்கள் இத்திட்டம் மூலம் பலனடைந்தனர்.

இது இதற்கு முந்திய ஆண்டைக்காட்டிலும் 25 விழுக்காடு அதிகம்.

கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக ஏற்பட்ட பொருளியல் சரிவும் தேவைப்படுவோருக்கு கோம்கோர் உதவி வழங்குவதில் சமூக சேவை அலுவலகங்கள் காட்டிய நீக்குப்போக்கும் இந்த அளவுக்கு அதிகமானோரை உதவி சென்றடைய முக்கிய காரணங்களாக அமைந்ததாக அமைச்சு கூறியது.

உதாரணமாக, கோம்கேர் பயனாளிகள் உதவிபெறும் காலம் கடந்த ஆண்டின் மே மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் முடிவடைந்துவிட்டது.

இருப்பினும், கொள்ளைநோய் காலத்தில் சிரமத்தைப் போக்கும் நோக்கில் உதவிபெறும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு அமைச்சு தானாகவே முன்வந்து நீட்டித்தது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறுகையில், "தொடர்ந்து நீடிக்கும் கொள்ளைநோய் காரணமாக ஏராளமான குடும்பங்களும் தனிப்பட்டவர்களும் சமூக, பொருளியல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அதனை கருத்தில் கொண்டே நிதி ஆதரவு பெறும் முறை எளிமையாக்கப்பட்டு உள்ளது," என்றார்.

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு 'கோம்கேர்' மூலம் $236 மி. உதவி