நார்வேயின் கொங்ஸ்பெர்க் நகரில் அம்பு எய்து ஐந்து பேரைக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான அந்த ஆடவர் டென்மார்க் நாட்டவர் அன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று மாலை நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில், பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் தனி ஆளாக செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட காவல்துறை, தாக்குதலுக்கான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை. காயமடைந்த நிலையில் அந்த ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைநகர் ஓஸ்லோவிலிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அந்நகரின், பேரங்காடி உட்பட வெவ்வேறு இடங்களில் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த ஆடவர் அம்புத் தாக்குதலை நடத்தியுள்ளார். சுவர்களில் அம்பு பாய்ந்த அடையாளங்கள் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன. வில், அம்பைத் தவிர வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து போலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் எட்டு மருத்துவ வாகனங்களும் மூன்று மருத்துவ ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. நகரம் எங்கும் பெரும் எண்ணிக்கையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உத்தோயா தீவில், இளையர் முகாமொன்றில் தீவிரவாதியான ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் 77 பேரைக் கொன்ற படுகொலைச் சம்பவத்திற்குப் பிறகு நடந்துள்ள மோசமான தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
பொதுவாக ஸ்கேன்டிநேவிய நாடுகளில் காவல்துறையினர் துப்பாக்கியுடன் பணிபுரிவதில்லை. நேற்றைய சம்பவத்தை அடுத்து அனைத்து காவல்துறைப் பணியாளர்களும் ஆயுதம் வைத்திருக்குமாறு நார்வே காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டிருக்கிறது.

