சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக ஆக இளம் வயது உயிரிழப்புகள் நேற்று பதிவாகின.
23 மற்றும் 34 வயதுடைய இருவர் உட்பட மேலும் 15 பேர் இறந்துவிட்டனர்.
ஒருநாளில் பதிவான மரணங்களில் இதுவே ஆக அதிகம்.
அந்த 23 வயது மனிதர் முதல் தவணை தடுப்பூசி போட்டிருந்தார் என்றும் 34 வயதானவர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவ்விருவருமே வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
கடந்த மாதம் 50 வயதான ஒருவர் இறந்துபோனதே சிங்கப்பூரில் இதற்குமுன் கொரோனா தொற்றால் மாண்டவர்களில் ஆகக் குறைந்த வயதானவர்.
நேற்று உயிரிழந்த மற்ற 13 பேரும் 60 முதல் 89 வயதிற்கு இடைப்பட்டவர்கள். அவர்களில் எண்மர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை. அவர்கள் அனைவர்க்கும் வேறு உடல்நலக் கோளாறுகளும் இருந்தன.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை 207ஆக உயர்ந்தது. இம்மாதத்தில் மட்டும் இதுவரை 112 பேர் உயிரிழந்துவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், நேற்று புதிதாக 2,932 பேர்க்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 2,412 பேர் சமூகத்தில் இருப்போர், 517 பேர் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள். எஞ்சிய மூவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 138,327 ஆனது.

