கேரளா: கடும் மழை, நிலச்சரிவு; வீடுகள் இடிந்து 22 பேர் பலி; குடும்பமே மண்ணில் புதைந்த பரிதாபம்

கேரளா: கடும் மழை, நிலச்சரிவு; வீடுகள் இடிந்து 22 பேர் பலி; குடும்பமே மண்ணில் புதைந்த பரிதாபம்

2 mins read
43808f42-ae34-4495-9ecc-dbab38063ebf
கேரளாவின் தொடுபுழா என்ற ஊரில் பெய்த கடும் மழையில் இடிந்து விழுந்த தன் வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் செய்வதறியாது தன் வளர்ப்பு நாயுடன் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார் இந்த மனிதர். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டும் வீடுகள் இடிந்தும் 22 பேர் வரை மாண்டுவிட்டதாகவும் நேற்று மாலை தகவல்கள் தெரிவித்தன.

கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

கோட்டயத்தில் 13 பேர், இடுக்கியில் எட்டு பேர், கோழிக்கோடில் ஒருவர் மாண்டுவிட்டனர். கோட்டக்கல்லில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் புதைந்தனர். அவர்களில் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுவிட்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து பிள்ளைகள் உட்பட 13 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி எட்டு மாதர்கள், ஏழு சிறார்கள் உட்பட 33 பேர் காப்பற்றப்பட்டனர். பிறந்து 22 நாட்கள் ஆன குழந்தை மீட்கப்பட்டு உள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை மீட்புப் பணியில் உதவி வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 11 குழுக்களும் மீட்புப்பணியில் சேர்ந்துள்ளன.

இதனிடையே, கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளதால் பல மாவட்டங்களுக்குக் கடும் உச்சநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடும்படி கரையோர மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இவ்வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் ஆதரவையும் மத்திய அரசாங்கம் வழங்கும் என்று உறுதி கூறினார். பிரதமர் மோடி கேரள முதல்வருடன் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார்.