இந்தியா அடுத்த வாரம் ஒரு பில்லியன் தடுப்பூசி சாதனை

இந்தியா அடுத்த வாரம் ஒரு பில்லியன் தடுப்பூசி சாதனை

1 mins read
Google News Preferred Icon

இந்தியா அடுத்த வாரம் ஒரு பில்லியன் (100 கோடி) கொவிட்-19 தடுப்பூசி இலக்கைத் தாண்டிவிடும் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்து இருக்கிறார். சனிக்கிழமை நிலவரப்படி 976.2 மில்லியன் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்றார் அவர்.

கொவிட்-19 தொடர்பான கட்டுக் கதைகளைப் புறக்கணித்து தடுப்பூசி யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கொரோனா பாடல் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

இந்தியாவில் தடுப்பூசி போடும் இயக்கம் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். 590.9 மில்லியன் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில், கொவிட்-19 தொற்று கடந்த ஏழு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு குறைந்து இருப்பதாக அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்தது.

சனிக்கிழமை புதிதாக 14,146 பேருக்கு கிருமி தொற்றியதாகவும் 144 பேர் மரணமடைந்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறின.

குணமடையும் விகிதமும் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 98.10 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது.

கொவிட்-19 நிலவரம் சீரடைந்து வந்தாலும் அடுத்த மூன்று மாதத்திற்கு மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று இந்திய அரசாங்கம் எச்சரித்து உள்ளது. கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதை எடுத்துக் கூறி வலியுறுத்துவதற்காக 'கொரோனா 100 நாள் இலக்கு' என்ற ஓர் இயக்கத்தை அரசு தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.