கொரோனா: இதுவரை 233 பேர் உயிரிழப்பு

கொரோனா: இதுவரை 233 பேர் உயிரிழப்பு

1 mins read
cd6ed19f-bd13-4ef4-9b49-5a4a56d5a751
அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டுவரும் பெரிய அளவிலான கிருமித்தொற்றுக் குழுமங்களில் ஐந்தில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் 57 முதல் 100 வயதிற்குட்பட்ட மேலும் ஒன்பது சிங்கப்பூரர்கள் நேற்று இறந்துவிட்டனர். இதனையடுத்து, கொரோனா மரண எண்ணிக்கை 233ஆக உயர்ந்தது.

மாண்டோரில் ஆண்கள் அறுவர், பெண்கள் மூவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் இருவர் மட்டுமே தடுப்பூசி போட்டிருந்தனர். தடுப்பூசி போட்டிராத ஒருவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்தன.

தொடர்ந்து 28வது நாளாக கொரோனாவால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

நேற்று புதிதாக 3,058 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 2,454 பேர் சமூகத்தினர், 601 பேர் தங்குவிடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், மூவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

கிருமித்தொற்றுக்காக 1,651 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 327 நோயாளிகளுக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 148,178 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்
கொவிட்-19கிருமித்தொற்று