கொவிட்-19 கிருமித்தொற்றை ஒடுக்கி பொருளியலைத் திறந்துவிட அரசாங்கம் கைக்கொள்ளும் அணுகுமுறை சரியான ஒன்று என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். விடியல் வெளிச்சத்தை நோக்கி நாளுக்கு நாள் நாம் முன்னேறி வருவதாக அவர் கூறினார்.
ஆசியப் பசிபிக் சுகாதாரப் பராமரிப்பு, தகவல் நிர்வாக முறை சங்க மாநாட்டில் நேற்று உரையாற்றிய அமைச்சர், சிங்கப்பூரின் அணுகுமுறை காரணமாக பெரிய அளவில் மரணங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் தொற்று கூடி இருக்கிறது. மரணங்களும் அதிகரித்து உள்ளன. ஆகையால் சுகாதார அமைச்சு மனிதவள ஆற்றலைத் திரட்டி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன. சுமையைப் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில் தனியார் துறை மருத்துவமனைகளையும் அமைச்சு பயன்படுத்திக் கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மின்னிலக்கம் காரணமாக ஏற்படக்கூடிய உருமாற்றம் இதர துறைகளைப் போல அவ்வளவு வேகமாக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றார் அமைச்சர்.
மின்னிலக்கத் தொழில்நுட்பம் பல துறைகளை உருமாற்றி உள்ளது என்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையும் அதற்கு விதிவிலக்காக இருக்காது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இருந்தாலும் சுகாதாரப் பராமரிப்புத் துறை மிகவும் சிக்கலான ஒன்று என்பதைச் சுட்டினார்.

