சிங்கப்பூர் பயணத்துக்கான எச்சரிக்கை நிலையை உயர்த்தியது அமெரிக்கா

சிங்கப்பூர் பயணத்துக்கான எச்சரிக்கை நிலையை உயர்த்தியது அமெரிக்கா

1 mins read
23a7e73f-4c0c-4059-993f-9187c0d94c00
-

பயணம் செய்ய அதிக ஆபத்துள்ள இடங்களுக்கான பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்த்துள்ளது அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம்.

அம்மையம் வெளியிட்டுள்ள பயண அறிவிப்புத் தகவலில், பயணத்துக்கான அதிக ஆபத்தைக் குறிக்கும் நான்காம் நிலைக்கு சிங்கப்பூரை உயர்த்தி உள்ளது.

இதற்கு முன்னர் மூன்றாம் நிலையில் சிங்கப்பூர் அந்தப் பட்டியலில் இருந்தது.

"நான்காம் நிலை: சிங்கப்பூரில் அதிக ஆபத்தான கொவிட்-19 நிலவரம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு சிங்கப்பூருக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்க மக்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.

"நீங்கள் சிங்கப்பூருக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தால் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதைப் பயணத்திற்கு முன்னர் உறுதி செய்துகொள்ளுங்கள்.

"முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள்கூட கொவிட்-19 வகைக் கிருமிகளால் பாதிக்கப்பட்டு அதனைப் பரப்பிவிடும் நிலை தற்போது சிங்கப்பூரில் உள்ளது.

"நீங்கள் சிங்கப்பூரில் இருக்கும்போது கட்டுப்பாடுகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றுங்கள். முகக்கவசம் அணிந்திருங்கள். மற்றவர்களிடம் இருந்து ஆறு அடி தூரம் (1.83 மீட்டர்) தள்ளி இருங்கள்," என்று பயணிகளுக்கு அந்த மையம் ஆலோசனை வழங்கி உள்ளது.

கொவிட்-19 சம்பவங்கள் காரணமாக சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்கத் தற்காப்புத் துறை திங்கட்கிழமை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையத்தின் நடவடிக்கை இடம்பெற்று உள்ளது.