பயணம் செய்ய அதிக ஆபத்துள்ள இடங்களுக்கான பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்த்துள்ளது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம்.
அந்த மையம் வெளியிட்டுள்ள பயண அறிவிப்புத் தகவலில், பயணத்துக்கான அதிக ஆபத்தைக் குறிக்கும் நான்காம் நிலைக்கு சிங்கப்பூரை உயர்த்தி உள்ளது.
இதற்கு முன்னர் அந்தப் பட்டியலில் மூன்றாம் நிலையில் சிங்கப்பூர் வைக்கப்பட்டு இருந்தது.
"நான்காம் நிலை: சிங்கப்பூரில் அதிக ஆபத்தான கொவிட்-19 நிலவரம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு சிங்கப்பூருக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்க மக்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.
"நீங்கள் சிங்கப்பூருக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தால் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதைப் பயணத்திற்கு முன்னர் உறுதி செய்துகொள்ளுங்கள்.
"முழுமையாகத் தடுப்பூசி
போட்டுக்கொண்ட பயணிகள்கூட கொவிட்-19 வகைக் கிருமிகளால் பாதிக்கப்பட்டு, அவற்றைப் பரப்பி
விடும் நிலை தற்போது சிங்கப்பூரில் உள்ளது.
"நீங்கள் சிங்கப்பூரில் இருக்கும்போது யோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுங்கள். முகக் கவசம் அணிந்திருங்கள். மற்றவர்களிடம் இருந்து ஆறு அடி தூரம் (1.83 மீட்டர்) தள்ளி இருங்கள்," என்று பயணிகளுக்கு அந்த மையம் ஆலோசனை வழங்கி உள்ளது.
அண்மைய கொவிட்-19 சம்பவங்கள் காரணமாக சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்கத் தற்காப்புத் துறை திங்கட்கிழமை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையத்தின் நட
வடிக்கை இடம்பெற்றுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூரில் தனித்திருக்க வேண்டியதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் நாடுகளின் பட்டியலை அண்மையில் சிங்கப்பூர் விரிவுபடுத்தியது.
சிங்கப்பூரின் அடுத்தகட்ட எல்லை திறப்பு முயற்சி இது.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட தடுப்பூசிப் பயண சிறப்பு ஏற்பாட்டின்கீழ் முதல் விமானம் இன்று புதன்கிழமை சிங்கப்பூர் வந்துசேர ஏற்பாடு செய்யப் பட்டது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து புறப்படும் அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்க்யூ329 விமானம் சாங்கி விமான நிலையத்தை இன்று அதிகாலை 5.55 மணிக்கு வந்தடைந்திருக்கும் என கருதப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து புறப்படும் விமானம் நாளை அதிகாலை 5.20 மணிக்கு சிங்கப்பூர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

