மருத்துவமனைகளுக்கும் பராமரிப்பு இல்லங்களுக்குமான நேரடி வருகைகளுக்கு நவம்பர் 21ஆம் தேதிவரை தொடர்ந்து அனுமதி இல்லை என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது. சமூகத்தில் கிருமித்தொற்று அதிகரிப்பதால் மூத்தோருக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் சுகாதாரத்துறை வளங்களையும் பாதுகாக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு முன்னதாக மருத்துவமனைகளுக்கு சனிக்கிழமை அக்டோபர் 23ஆம் தேதி வரையிலும் பராமரிப்பு இல்லங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நீடிக்க வேண்டி இருந்தது.
கடந்த இரண்டு வாரங்களாக சமூகத் தொற்றுகள் அதிகரித்திருப்பதைச் சுட்டிய சுகாதார அமைச்சு, மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் உள்ளோரும் கிருமித்தொற்றுக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டது.
பெரிய கிருமிப்பரவலின் ஆபத்தைச் சமாளிக்க பூஸ்டர் தடுப்பூசிகள் சுகாதார ஊழியர்களுக்கும் மூத்தோருக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த சில நோயாளிகளுக்கு ஒருவர் அனுமதிக்கப்படலாம். இத்தகைய விதிவிலக்குகளை பரிசீலனைக்குப் பிறகு மருத்துவமனைகள் வழங்கலாம் என்றது சுகாதார அமைச்சு. கவலைக்கிடமான சூழ்நிலையில் இருக்கும் நோயாளிகள், பிள்ளைகள் அல்லது குழந்தைகள், பிள்ளையைப் பெறப்போகும் பெண்கள் அல்லது புதிதாகப் பிள்ளையைப் பெற்றவர்கள், பராமரிப்பாளர்களின் உதவி தேவைப்படுவோர் ஆகியோர் இந்தப் பிரிவில் அடங்குவர்.

