இருவர் மட்டுமே உணவுக் கடைகளில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடியும் என்ற கொவிட்-19 கட்டுப்பாட்டை அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. உணவு, பானத் துறையில் உள்ள வர்த்தகர்களுக்கு இந்த நீட்டிப்பு பெருத்த அதிருப்தியைத் தந்துள்ளது.
தமது உணவகத்தில் இசை ஒலிக்க அனுமதிக்கப்படாத நிலையில், அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயங்கர இசைச் சத்தமும் அதற்கு முகக்கவசம் அணியாத உறுப்பினர்கள் உடற்பயிற்சி செய்வதும் எந்த வகையில் வேறுபடுகிறது என்று 'சேவ்எஃப்என்பிஎஸ்ஜி' குழு உறுப்பினர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கேட்டார்.
கிருமி முறியடிப்புக் காலகட்டம் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது 500க்கும் மேற்பட்ட உணவகங்கள் ஒருசேர இக்குழுவை அமைத்து, ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன. விமானத்தில் 100 பேர் முகக்கவசத்தை அகற்றிவிட்டு சாப்பிட அனுமதிக்கப்படும்போது, வெவ்வேறு துறைகளில் ஏன் கட்டுப்பாடுகள் வேறுபடுகின்றன என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
கடைத்தொகுதிக்குள் ஐவராக வரும் ஒரு குடும்பம், உணவகத்தில் பிரிந்து உட்கார வேண்டும் என்று சொல்வதற்குப் பின்னால் என்ன காரணம் என்றும் அவர்கள் வினவினர்.
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ளவர்களின் எண்ணிக்கை தமக்கு எந்த வகையிலும் தெளிவை அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட ஓர் உறுப்பினர், ஐசியுவில் எந்த எண்ணிக்கையை அடைந்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்ற இலக்கைத்தான் தாம் அறிய விரும்புவதாகத் தெரிவித்தார்.
உணவு விநியோகத் தொடர் மீது தாக்கம், வருவாய் கிட்டத்தட்ட 30% சரிவு, வாடகை செலுத்துவதில் தாமதம் போன்ற விவகாரங்களும் கடைக்காரர்களுக்குக் கவலை அளித்து வருகின்றன.
கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதாக ஒரே ஆண்டில் மீண்டும் மீண்டும் கொவிட்-19 தொடர்பான விதிகளை மாற்றியதில் சிங்கப்பூரின் முன்கள வர்த்தகச் சமூகத்தினர் 'ஆழ்ந்த துயரத்திலும் அழிவின் விளிம்பிலும்' இருப்பதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் 'நியாயத்துக்காக சிங்கப்பூர் ஒன்றுபட்ட வாடகைதாரர்கள்' குழு நேற்று குறிப்பிட்டது.
நெருக்கடி நிலையைச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு நெருங்குவதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், மூழ்காமல் இருக்க, வர்த்தகத்தைப் பிடித்துக்கொண்டு இருப்போரது கப்பலையே இந்த நீட்டிப்பு மூழ்கடித்துவிடும் என்றது அக்குழு.

