ஆஸ்திரேலியா - சிங்கப்பூர் பயண ஏற்பாடு அடுத்த வாரம் அமைக்கப்படலாம்

ஆஸ்திரேலியா - சிங்கப்பூர் பயண ஏற்பாடு அடுத்த வாரம் அமைக்கப்படலாம்

1 mins read
4e12d779-a400-4d88-a032-04e2e97296b1
சிட்னி விமான நிலையத்தில் குவாண்டாஸ் விமானம் ஒன்றைச் சுத்தப்படுத்தும் ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூருடன் பாதுகாப்பான பயண வளையத்தை (travel bubble) அடுத்த வாரம் அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது. இதன்மூலம், நவம்பர் முதல் பயணிகள் ஆஸ்திரேலியா சென்றவுடன் அங்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தினார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான இந்தப் பயண ஏற்பாடு நவம்பர் 23ஆம் தேதிக்குள் நடப்புக்கு வரலாம் என அவர் குறிப்பிட்டார்.

தொடக்கக் கட்டமாக, அனைத்துலக மாணவர்களுக்கும் வர்த்தகப் பயணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

பிறகு, ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய டிசம்பர் முதல் சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படலாம்.

"சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இந்த ஏற்பாட்டை நிறைவுசெய்யும் இறுதிக்கட்டத்தில் நாங்கள் உள்ளோம்," என்று செய்தியாளர்களிடம் திரு மோரிசன் கூறினார்.

திரு மோரிசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், விசா வைத்திருப்போர் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் திரு மோரிசன் சிங்கப்பூருக்கு வருகை அளித்தபோது, இந்தப் பயண ஏற்பாட்டை தொடங்குமாறு அவருக்குத் தாம் ஊக்குவித்து இருந்ததாக பிரதமர் லீ சொன்னார்.