ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், வேலையிடத்திற்குத் திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும், அல்லது கொவிட்-19 தொற்றிலிருந்து அவர்கள் குணமடைந்து 270 நாட்களாகி இருக்க வேண்டும்.
தடுப்பூசி அடிப்படையிலான வேறுபடுத்தப்பட்ட நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இப்புதிய நடைமுறை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, வேலையிடத்திற்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் திரும்ப நேரிட்டால் அவர்கள் முதலில் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனையை (ஏஆர்டி) தங்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான பின்னரே, வேலையிடத்திற்குத் திரும்பலாம். இந்த ஏஆர்டி முடிவு, 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
கொவிட்-19க்கு எதிராக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழு, நேற்று இதனை அறிவித்தது. சிங்கப்பூரின் ஊழியரணியில் 96 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக பணிக்குழுவின் இணைத் தலைவரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் சுமார் 113,000 பேர் உள்ளனர் என்றும் அவர்களில் 10 விழுக்காட்டினர் முதியவர்கள் என்றும் அவர் கூறினார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சீனாவின் 'சினோவேக்' தடுப்பூசியைச் சேர்த்திருப்பது குறித்தும் திரு கான் அறிவித்தார். இருப்பினும் மூன்று முறை இத்தடுப்பூசியைப் போட்டால் மட்டுமே, முழுமையாகத் தடுப்பூசி போட்டவர் என்று கருத முடியும் என்றார் அவர்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டால், அவர்கள் வீட்டில் இருந்தவாறு குணமடையும் நடைமுறையையும் சிங்கப்பூர் அரசாங்கம் புதிதாகக் கொண்டு வந்துள்ளது.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் தகுதி இல்லை என்று மருத்துவச் சான்றிதழ் அளிக்கப்படும் நபர்கள், வெவ்வேறு இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவது தொடர்பில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலைத்தன்மை நடவடிக்கைகள், வரும் மாதத்தில் மாற்றம் காணும் என்று தெரிவித்த சுகாதார அமைச்சு, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு பல அம்சங்கள் ஆராயப்படும் என்று குறிப்பிட்டது.