கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு, பலத்த கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் முதன்முதலாக நேரடியாகக் கலந்துகொண்ட தீமிதித் திருவிழா இன்று சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடந்தேறியது.
பக்தர்கள் முகக்கவசம் அணிந்து பூக்குழியில் இறங்கியதும் தீமிதித் திருநாள் வரலாற்றில் இதுவே முதன்முறை.
கரகம் கட்டுவதற்கு மூவர், எட்டு அடி அகலமும் 18 அடி நீளமும் கொண்ட பூக்குழியைத் தயார்ப்படுத்த 45 பேர், பாதுகாப்பு, மருத்துவம், நிர்வாகம் ஆகியவற்றுக்காக 60 பேர் என மொத்தம் 150 தொண்டூழியர்கள் பங்களித்தனர்.
கடந்த ஆண்டில் பூக்குழி ஆறு அடி அகலம், 18 அடி நீளத்திலும் அதற்கு முந்திய ஆண்டில் 10 அடி அகலம், 18 அடி நீளத்திலும் அமைக்கப்பட்டது என்றும் கோயிலின் செயலாளர் கதிரேசன் சண்முகம் தெரிவித்தார்.
பூக்குழி இறங்கும் நாளான நேற்றுக் காலையில் படுகளம் என்ற சடங்கு இடம்பெற்றது. அதன்பின், பூக்குழியை அமைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.
சென்ற ஆண்டைப் போலவே இம்முறையும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ மாரியம்மன் கோவிலை வந்தடையும் பக்தர்கள் ஊர்வலம் இடம்பெறவில்லை.
இவ்வாண்டின் பங்கேற்பாளர்கள் பகோடா ஸ்திரீட்டில் பதிவு செய்து, அங்கிருந்து 20 மீட்டர் நடந்து சென்றனர்.
ஆலயத்தின் தலைமைப் பண்டாரம் 37 வயது திரு வேணுகோபால் திருநாவுக்கரசு மாலை 4.50 மணிக்குக் கரகத்தைச் சுமந்துகொண்டு, கோயிலில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர் மாலை 5 மணியளவில் முதலாவதாக அவர் பூக்குழியில் இறங்கி, நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இம்முறை பூக்குழி இறங்க 950 பேர் பதிவுசெய்து இருந்தனர்.
கோவில் நிர்வாகத் தலைவர் சீ.லெச்சுமணன் கூறுகையில், "சென்ற ஆண்டு தீமிதி விழாவில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று பக்தர்கள் ஏங்கினர். கோயில் நிர்வாகத்தினரான எங்களுக்கும் பொதுமக்கள் இல்லாமல் நடத்துகிறோமே என்ற ஆதங்கம் இருந்தது. இவ்வாண்டு அந்தக் குறை தீர்ந்தது," என்றார்.
வழக்கமாக தீமிதியில் கலந்துகொள்வோரில் 40 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்களாக இருப்பர் என்ற திரு லெச்சுமணன், இவ்வாண்டு பூக்குழி இறங்க பதிவுசெய்த 950 பேரில் 85 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள், 15 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்றார்.
இன்னும் அதிகமானோர் கலந்துகொள்வதற்கு அனுமதிபெற தாங்கள் முயன்றபோதும் அது முடியாமல் போனது என்றும் அடுத்த ஆண்டேனும் மக்கள் முழு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் வகையில் சூழல் மேம்பட வேண்டும் என்பதே தங்களின் வேண்டுதல் என்றும் அவர் சொன்னார்.
"இம்முறை தீமிதித் திருவிழாவில் பொதுமக்களும் பங்கேற்க முடிந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதில் சிலருக்கு வருத்தம் இருக்கலாம். எங்களால் முடிந்தவரை அதிகமானோரைச் சேர்க்க முயன்றோம். பொதுமக்கள் மிகவும் ஒத்துழைத்தனர். வந்தவர்களின் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் உணர முடிந்தது," என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான த.ராஜசேகர்.
விரிவான செய்தி நாளைய (25 அக்டோபர்) தமிழ் முரசு செய்தித்தாளில் இடம்பெறும்.

