முதியோருக்காக இணைய வேலைவாய்ப்பு வாசல், கதைசொல்லும் திட்டம்
சிங்கப்பூரில் மூப்படையும் அனுபவம் மக்களுக்கு மனநிறைவானதாக இருப்பதை உறுதிப்படுத்த பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.
முதியவர்கள் பொருத்தமான, பொருள்பொதிந்த வேலையைப் பெறுவதற்கு உதவும் இணைய வேலைவாய்ப்பு வாசல், பல தலைமுறைகளை உள்ளடக்கி கதை சொல்லும் திட்டம், தலைமுறைகளுக்கு இடையில் பிணைப்பை பலப்படுத்துவதில் ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய கஃபே எனப்படும் சிற்றுண்டிக்கூடம் முதலானவை அந்த யோசனைகளில் உள்ளடங்கும்.
சுகாதார, மனிதவள, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சுகள் அமைத்துள்ள 'குடிமக்கள் குழு' என்ற அமைப்பின் கூட்டத்தில் அந்த யோசனைகள் நேற்று முன்வைக்கப்பட்டன.
'வெற்றிகரமான வயது மூப்புச் செயல்திட்டம்' என்ற ஒரு திட்டம் 2015ல் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்திற்குப் புதுப்பொலிவு தர 'அமைச்சு நிலை வயது மூப்புக் குழு' என்ற அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக நேற்றைய குழுக் கூட்டம் நடந்தது.
வெற்றிகரமான வயது மூப்புக்கான செயல்திட்டம் காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கிறது என்பதையும் அது எதிர்கால மூத்த குடிமக்களுக்குப் பலன் அளிக்கும் என்பதையும் உறுதிப்படுத்த அந்த அமைச்சு நிலைக் குழு விரும்புகிறது. அதோடு, கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களுக்கு உரிய தீர்வு காண்பதும் அதன் விருப்பமாக இருக்கிறது.
நேற்று நடந்த குடிமக்கள் குழுவின் விவாதிப்புக் கூட்டத்தில் சுகாதார இரண்டாம் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார். வேலை நியமனம், தொண்டூழியம் ஆகியவற்றைக் கருப்பொ ருளாகக் கொண்ட ஒன்பது திட்டங்கள் அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
அந்தக் குழு தன்னுடைய யோசனைகளை அரசாங்கத்திடம் தாக்கல் செய்யும். அவற்றைப் பரிசீலித்து அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்த எப்படி ஆதரவு அளிக்கலாம் என்பது பற்றி அரசாங்கம் முடிவு செய்யும்.
வேலை தேடும் முதியவர்களை நிறுவனங்கள் வேலைக்குச் சேர்க்க ஊக்கமூட்டும் மதிப்பீட்டு முறை ஒன்றை அமல்படுத்தலாம் என்றும் நேற்றைய குழு விவாதிப்பின்போது யோசனை தெரிவிக்கப்பட்டது.
வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி நெறிமுறைகளையும் கிடைக்கக்கூடிய வளங்களையும் முதியவர்கள் தெரிந்துகொள்ளவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் ஏதுவாக இணையவாசல் ஒன்றை ஏற்படுத்தலாம் என்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக ஓர் அலுவலகத்தை அமைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இளைய தலைமுறையினரை ஈடுபடுத்த முதியவர்களுக்குப் பயிற்சி அளித்து முதியோரைத் தொண்டூழியத்தில் ஈடுபடுத்தும் கதை சொல்லும் திட்டம், ஒருவருடன் வேறுபட்ட தலைமுறையைச் சேர்ந்த வேறு ஒருவர் கலந்து பழகி பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவும் சிற்றுண்டிக்கூடம் ஆகியவையும் இதர யோசனைகளாக முன்வைக்கப்பட்டன.

