புக்கிட் மேரா பலதுறை மருந்தகத்தில் மொத்தம் 117 நோயாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. போடப்பட்ட தடுப்பூசி மருந்து, பரிந்துரைக்கப்பட்ட அளவில் 10ல் ஒரு பங்கு அளவுள்ளது.
அண்மையில் இந்த மருந்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஊசிகளில் இடம்பெற்றிருந்த குறியீடுகளை அடையாளம் காண்பதில் தவறு ஏற்பட்டுவிட்டதாக சிங்ஹெல்த் பாலிகிளினிக்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டுவிட்டதால் ஆறு ஊழியர்களும் 111 நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஏறத்தாழ 10 விழுக்காடு அளவுக்குக் குறைந்த மருந்துள்ள தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக சிங்ஹெல்த் குழுமம் விளக்கியது. அந்தச் சம்பவம் தனிப்பட்ட ஒரு சம்பவம் என்பது புலன்விசாரணை மூலம் உறுதியானது. சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களில் இதர தடுப்பூசி சேவைகளும் மற்ற சேவைகளும் பாதிப்படையவில்லை என்றும் அறிக்கை தெரிவித்தது. குறைந்த அளவு தடுப்பூசி போட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்காகவும் பதற்றத்திற்காகவும் சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் ஈ மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
"நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன என்று உறுதிபட கூறுகிறோம்," என்று தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளைப் போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூடிய விரைவில் அவர்களுக்கு கொவிட்-19 மாற்றுத் தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
"தவறை சரிசெய்ய உடடினயாக நாங்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். தவறு கண்டுபிடிக்கப்பட்டதுமே அது எந்த அளவுக்கு இடம்பெற்றது என்பதைத் தீர்மானிக்க உடனடி முயற்சிகள் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளப்பட்டது," என்று சிங்ஹெல்த் கூறியது.
சுகாதார அமைச்சு பிறப்பித்து இருக்கும் இப்போதைய தடுப்பூசி வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் பார்த்தால், குறைந்த அளவு மருந்துள்ள தடுப்பூசி பாதக விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது என்பது தெரியவருகிறது. தவறாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாற்றாக கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. பாதிக்கப்பட்டவர்கள் சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களில் மாற்று ஊசியைப் போட்டுக்கொள்வதற்கு முன்பாக ஒரு மருத்துவரால் மதிப்பிடப்படுவார்கள். இது ஒரு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடம்பெறும் என்றும் குழுமம் தெரிவித்
|துள்ளது.

