தடுப்பூசி போடாத எண்மர் உட்பட 15 பேர் கிருமித்தொற்றால் இறப்பு

தடுப்பூசி போடாத எண்மர் உட்பட 15 பேர் கிருமித்தொற்றால் இறப்பு

1 mins read
387bddbb-fc93-41a4-afbf-dc6e9a8646d3
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 172,644ஆக உயர்ந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்று காரணமாக நேற்று 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேலும் 15 பேர் மாண்டுவிட்டனர். அவர்கள் 58 முதல் 100 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.

மாண்டோரில் எண்மர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவில்லை. ஒருவர் முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டிருந்தார். எஞ்சிய அறுவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்றும் ஆண்கள் எண்மர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்று உயிரிழப்பு 315ஆக உயர்ந்தது.

இறந்தோர் அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் தொடர்ந்து 35வது நாளாக கொரோனாவால் மரணம் நிகழ்ந்துள்ளது.

இதனிடையே, சமூகத்தில் 2,708 பேர், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 667 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த எண்மர் எனப் புதிதாக 3,383 பேரை கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 172,644 ஆனது.

கிருமித்தொற்றுக்காக 1,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுப் பிரிவில் 278 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுவதாகவும் நிலையில்லா உடல்நிலையுடன் இருக்கும் 97 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

மோசமாக உடல்நிலையுடன் கூடிய மேலும் 58 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கொவிட்-19கிருமித்தொற்று