கரிமம் மேலும் குறைய முயற்சி

கரிமம் மேலும் குறைய முயற்சி

3 mins read

2035ல் 30% மின்சாரத்தைக் கரிமம் குறைவான ஆலைகளில் இருந்து பெற சிங்கப்பூர் திட்டம்

சிங்­கப்­பூர் தனது எரி­சக்தித் துறை­யில் கரிம அளவை மேலும் குறைக்க திட்­ட­மி­டு­கிறது. வரும் 2035ஆம் ஆண்டு வாக்­கில் சூரிய, காற்று எரி­சக்தி ஆலை­கள் போன்ற கரி­மம் குறைந்த நிறு­வ­னங்­களிடம் இருந்து ஏறத்­தாழ 30 விழுக்காட்டு மின்­சா­ரத்­தைப் பெற்று அதன் மூலம் அந்­தத் திட்­டத்தை சிங்­கப்­பூர் நிறை­வேற்­றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்­தத் திட்­டங்­க­ளின் பல­னாக சிங்­கப்­பூர் மற்ற நாடு­களில் இருந்து காற்று எரி­சக்தி, நீர்மின்­சக்தி வளங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்கொள்ள வழி ஏற்­படும்.

வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வார தொடக்க நிகழ்ச்­சி­யில் இதனை அறி­வித்­தார்.

வருங்­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரின் எரி­சக்தித் துறை பரி­ணா­மத்­தில் குறைந்த கரிம எரி­சக்­தியை இறக்­கு­மதி செய்­வதே முக்­கி­ய­மான அணு­கு­மு­றை­யாக இருக்­கும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

பல நாடு­களும் தங்­க­ளு­டைய எரி­சக்தித் துறையை உரு­மாற்­றம் செய்­யப்­போ­வ­தாக ஏற்­கெ­னவே உறுதி கூறி உள்­ளன. நிலக்­கரி, இதர எரி­பொ­ருள் படி­வங்­களைக் குறைத்­துக்­கொண்டு சூரிய சக்தி, காற்று மின்­சக்தி போன்­ற­வற்றை அதி­க­மாகப் பயன்­ப­டுத்த அவை இலக்கு நிர்­ண­யித்து இருக்­கின்­றன.

இருந்­தா­லும்­கூட இந்த மாற்­றம் ஒரு சவா­லா­கவே இருக்­கும். சரி­யாக நிர்­வ­கிக்­கப்­ப­ட­வில்லை என்­றால் இதில் ஆபத்­தும் இருக்­கிறது என்றார் அமைச்­சர்.

வழி­வ­ழி­யாக எரி­சக்­தி­யைப் பெறு­கின்ற முறை­யின் பெரும் பகு­தியை ஒரு நாடு திடீ­ரென மாற்­றி­னால் எதிர்­பா­ராத பாது­காப்பு, நம்­ப­கத்­தன்மை பிரச்­சினை ஏற்­படக்­கூ­டும் என்­ப­தைச் சுட்­டிய அமைச்­சர், இருந்­தா­லும் சிங்­கப்­பூர் தனது எரி­சக்­தித் துறை உரு­மாற்­றத்­தைக் கைவி­டாது அல்­லது அந்த வேகத்­தைக் குறைக்­காது என்று தெரி­வித்­தார்.

வழி­வ­ழி­யான எரி­சக்தி முறைக்­குப் பதி­லாக சூரிய மின்­சக்தி, காற்று மின்­சக்தி போன்ற துறைக்கு மாறு­வது மின்சாரத்தை மலி­வா­கப் பெறு­வ­தற்­கான வழி­யாக இருக்க வாய்ப்பு இல்லாமலும் போகலாம் என அமைச்சர் சுட்­டி­னார்.

2035ஆம் ஆண்­டு­வாக்­கில் சிங்­கப்­பூருக்கு மொத்­தம் 4 கிகா­வாட் குறைந்த அளவு கார்­பன் மின்­சா­ரத்தை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான திட்­டங்­க­ளைத் தாக்­கல் செய்­யும்­படி இரண்டு வேண்­டு­கோள்­களை விடுக்­க­லாம் என்று எரி­சக்­திச் சந்தை ஆணை­யம் திட்­ட­மி­டு­கிறது.

கரிமக் குறைப்புத் தொழில்நுட்பங்களுக்கு $10 மி. புதிய நிதிகள் அறிவிப்பு

கரி­மத்தைக் குறைப்­ப­தற்­கான ஆய்­வு­களுக்கு சிங்­கப்­பூர் மேலும் நிதி ஒதுக்கு­கிறது. இத­னை­யொட்டி மொத்­தம் $10 மில்­லி­யன் புதிய நிதி­கள் நேற்­று தொடங்­கப்­பட்­டன. சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வார தொடக்க நிகழ்ச்சி­யில் பல்­வேறு அமைப்­பு­களும் இதற்கான அறி­விப்­பு­களை விடுத்­தன.

கரி­மம் குறைந்த எரி­சக்தி ஆய்வு நிதி பற்றி ஏற்­கெ­னவே ஓர் அறி­விப்பு வெளி­யாகி இருக்­கிறது. அதற்குத் தொடக்­கத்­தில் $49 மில்­லி­யன் நிதி ஒதுக்­கப்­பட்­டது. அந்­தத் தொகை $55 மில்­லி­ய­னாக அதி­க­ரிக்­கப்­பட்டுள்ளது.

அந்­தத் தொகை ஹைட்­ர­ஜன், கார்­பன் பய­னீடு, சேமிப்பு உள்­ளிட்ட பல துறை­க­ளி­லும் இடம்­பெ­றும் 12 ஆய்வுத் திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும்.

எரி­சக்­திச் சந்தை ஆணை­யத்­திற்­கும் 'என்­வி­ஷன் டிஜிட்­டல் இன்­டர்­நே­ஷ­னல்' என்ற நிறு­வ­னத்­துக்­கும் இடை­யில் புதி­தாக $4 மில்­லி­யன் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு ஏற்­பட்டு இருக்­கிறது.

எரி­சக்­திச் சந்தை ஆணை­யம், ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த $6 மில்­லி­யன் தொகை என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் ஆத­ர­வு­டன் ஜூரோங் தீவு சூரிய, காற்று எரி­சக்தித் திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட வர்த்­தக, தொழில் இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லெங், எரி­சக்­தியை செம்­மை­யாகப் பயன்­ப­டுத்­திக்கொள்ள புத்­தாக்க வழி­களை சிங்­கப்­பூர் காண­வேண்­டும் என்­றார்.