முக்கிய வட்டாரங்களில் கட்டப்படும் எதிர்கால வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த வட்டாரங்களில் வாங்கும் வீடுகளில் வசிக்கும் காலம் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக இருக்க வேண்டும். தற்போது ஐந்து ஆண்டுகளாக இது இருக்கிறது.
மேலும், வீட்டை வாங்கியபோது கிடைத்த மானியத்தை, அதை விற்கும்போது அரசாங்கத்திடம் திருப்பியளிக்க வேண்டும்.
முக்கிய வட்டாரங்களில் கட்டப்படும் வீடுகள் கட்டுப்படியாகக்கூடிய விலையில் வைத்திருக்கும் நோக்கத்தோடு இப்புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) தெரிவித்தார்.
முக்கிய வட்டாரங்களில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடமைப்புத் திட்டங்களில் முதல் திட்டம் ரோச்சோர் வட்டாரத்தில் அமைகிறது. அடுத்த மாதம் இதற்கான விற்பனை அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
முக்கிய வட்டாரங்களில் உள்ள வீடுகளை மறுவிற்பனைச் சந்தையில் வாங்கும்போது, மொத்த மாத வருமானம் $14,000க்கு மேல் இல்லாத குடும்பத்தினர் மட்டுமே வாங்க முடியும் என்பது மற்றொரு விதிமுறை. இங்கு வீடுகளை வாங்கும் குடும்பத்தினரில் குறைந்தது ஒருவர் சிங்கப்பூரராக இருக்க வேண்டும்.
ஆனால், பெற்றோரும் பிள்ளைகளும் நெருக்கமாக வசிக்க உதவும் திருமணமான பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டத்துக்கு குறைவான வீடுகள் ஒதுக்கப்படலாம்.
தற்போது இந்தத் திட்டத்தின்கீழ், முதல் முறையாக வீடு வாங்கும் குடும்பத்தினருக்கு 30 விழுக்காடு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
முக்கிய வட்டார வீட்டுத் திட்டம், முக்கிய வட்டாரங்களில் கட்டப்படும் எதிர்கால வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறை பொருந்தாது.

