இனிமேல் அடையாள அட்டையை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
வரும் திங்கட்கிழமை நவம்பர் 1ஆம் தேதி முதல் பெரும்பாலான சேவைகளுக்கு சிங்பாஸ் தொலைபேசி செயலியிலுள்ள மின்னிலக்க அட்டையைப் பயன்டுத்தலாம்.அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம், அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை நேற்று வெளியிட்ட அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளன.
அனைத்து அரசாங்க அமைப்பு களிலும் மின்னிலக்க அட்டையைப் பயன்படுத்தி நேரடிச் சேவைகளைப் பெறலாம். இயந்திரங்கள் வழியான சேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.
பலதுறை மருந்தகங்களில் பெயர்ப் பதிவுசெய்தல், நூலகங்களில் நூல் இரவல் பெறுதல், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தில் கடப்பிதழ் பெறுதல், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் வீட்டிற்குப் பதிவுசெய்தல் மற்றும் சாவி பெறுதல், அரசாங்கக் கட்டடங்களில் நுழை யும்போது பெயர்ப் பதிவுசெய்தல் ஆகியவற்றுக்கு சிங்பாஸ் செயலி யில் உள்ள மின்னிலக்க அட்டையைப் பயன்படுத்தலாம்.
இப்போதைக்கு, அடையாள அட்டையைக் காட்ட வேண்டிய சட்ட தேவைகளுக்கு சில விதிவிலக்குகள் இருக்கும்.
திருமணப் பதிவு, ஹோட்டல்களில் பதிவு செய்தல், குற்றவியல் நடைமுறைச் சட்டம் அல்லது தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் போன்றவற்றுக்கு அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்கும் மின்னிலக்க அடையாள அட்டையைப் பயன்படுத்துவதை முறைப்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் குறித்து அரசாங்கம் நட வடிக்கை எடுத்து வருவதாக அறிக்கை கூறியது.
தொலைபேசி அனுமதிக்கப்படாத பள்ளித் தேர்வுகள், அடை யாள அட்டை கொடுக்கப்பட வேண்டிய தேசிய சேவை சேர்க்கை போன்றவற்றுக்கு அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
மின்னிலக்க அடையாள அட்டை மற்றும் பிற சிங்பாஸ் அம்சங்களின் பயன்பாடு, வர்த்தகங்கள் தங்கள் பதிவுகளுக்காக மக்களின் அடையாள அட்டையைப் புகைப்படம் எடுப்பதற்கான தேவையைத் தவிர்க்கும்.
வரும் திங்கட்கிழமையில் இருந்து, அரசாங்க அமைப்புகள் மக்களின் அடையாள அட்டைகளை நகல் எடுக்காது.
தொலைத்தொடர்பு சேவைகளுக்குப் பதிவு செய்தல், வங்கிகளில் கணக்குகளைத் திறத்தல் போன்றவற்றுக்கு மின்னிலக்க அடையாள அட்டையைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பல தனியார் துறைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின் திட்டமிடல், முன்னுரிமை இயக்குநரக இயக்குநர் திரு டான் சீ ஹாவ் கூறினார்.
அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் துறையினர் மின்னிலக்க அடையாள அட்டையைப் புகைப்படம் எடுக்காமல் மக்களின் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வழி உண்டு என்றார் திரு டான்.
மின்னிலக்க அடையாள அட்டையில் உள்ள அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒருவரது அண்மைய புகைப்படம் அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவும். மேலும், விவரங்களைப் பெற அதில் 'பார்' குறியீடு இருக்கும்.
தனியுரிமை, பாதுகாப்பு அம்சங்கள் மெய்நிகர் ஆவணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சிங்பாஸ் செயலி ஒருவரது அடையாள அட்டை எண்ணின் கடைசி நான்கு எழுத்துக்களை மட்டுமே காட்டுகிறது, இது கைரேகை, முகத்தை 'ஸ்கேன்' செய்வது அல்லது மறைச்சொல் மூலம் மட்டுமே தெரியவரும். மின்னிலக்க அடையாள அட்டையிலுள்ள சிங்கத்தலை, அதனை தவறாகப் பயன்படுத்துவதையோ சிதைப்பதையோ தடுக்கிறது.
எனினும், மின்னிலக்க அடையாள அட்டை, நேரடி ஆவணத்துக்கு முழுமையான மாற்றாகாது. அடையாள அட்டை தொலைந்துபோனால், குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் புகார் செய்து, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

