மாதம் $2,000 வரை ஈட்டும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு $70 முதல் $90 வரை, அல்லது 4.5% முதல் 7.5% வரை, இவற்றில் எது அதிகமோ அதை ஊதிய உயர்வாக வழங்க வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் பரிந்துரைந்துள்ளது.
நீடித்த ஊதிய உயர்வை உறுதிசெய்ய இடைநிலை ஊதிய அளவைக் காட்டிலும் குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியம் வேகமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று மன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30 வரைக்குமான தனது வழிகாட்டி நெறிமுறைகளை மன்றம் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்டது.
இன்னும் சில துறைகள் அல்லது நிறுவனங்கள் பொருளியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதையும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது அல்லது மேலும் ஊதியத்தைக் குறைப்பது குறித்து அவை பரிசீலித்து வருவதையும் உணர்ந்துள்ள மன்றம், அவற்றுக்கு வேறுவிதமான அணுகுமுறையைப் பரிந்துரைத்துள்ளது.
ஊதிய உயர்வை நிறுத்திவைப்பது என முடிவுசெய்துள்ள நிறுவனங்கள், குறைந்த வருமான ஊழியர்களுக்கு 50 வெள்ளிவரை ஊதிய உயர்வு அளிப்பது குறித்தும் மேலும் ஊதியக் குறைப்பை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அவ்வாறு செய்யாமல் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.