கொவிட்-19 தொற்று ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீண்ட அல்லது மீண்டுவரும் நிறுவனங்கள், ஊதியக் குறைப்பிற்கு ஆளான ஊழியர்களின் ஊதியத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் பரிந்துரைத்துள்ளது.
தற்காலிகப் பணிநீக்கம் போன்ற ஊதியம் சார்ந்த செலவுச் சேமிப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்னும் சிரமத்தில் இருந்து மீள முடியாமல் தடுமாறிவரும் நிறுவனங்கள், முடிந்த அளவிற்கு ஊதியம் சாரா செலவுச் சேமிப்பு நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு வருடாந்திரக் கூடுதல் சம்பளத்தை (AWS) வழங்க முயல வேண்டும் என்றும் மன்றம் கூறியுள்ளது.
தொழில் மற்றும் ஊழியரணி உருமாற்றம், பொருத்தமான செலவுச் சேமிப்பு நடவடிக்கைகள் மூலம் ஊழியர்களைத் தக்கவைத்தல், பாதிக்கப்பட்ட தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து, நிறுவனத்திற்குள்ளேயே புதிய வேலைகளில் அமர்த்துதல் ஆகியவற்றுக்கு நிறுவனங்கள், அரசாங்கத்தின் ஆதரவைத் தொடர்ந்து பெறலாம்.
அதன்பின்னும் செலவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிறுவனங்கள், வேலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தற்காலிக ஊதியக் குறைப்பு நடவடிக்கையை அமல்படுத்தலாம் என்று மன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் 1 முதல் 2022 நவம்பர் 30 வரைக்குமான தனது வழிகாட்டி நெறிமுறைகளை மன்றம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது.