கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்போதிலும் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் உள்ளூர் தொழிலாளர் சந்தை மேம்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ஒட்டுமொத்த வேலை நியமன எண்ணிக்கையில் ஏற்பட்டிருந்த சரிவு மெதுவடைந்துள்ளதாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் வேலை நியமனத் திட்டத்தால் நிலைமை மேம்
பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டம் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படுவதால் பயணம் தொடர்பான துறைகளுக்குக் கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. "கடந்த ஜூலை மாதம் கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டபோதிலும் நமது தொழிலாளர் சந்தை தொடர்ந்து மீள்திறனுடன் இருந்ததை ஆட்குறைப்பு குறைந்திருக்கும் நிலை காட்டுகிறது.
"சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் தொடர்ந்து பல வேலை வாய்ப்புகள் உள்ளன," என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
மூன்றாம் காலாண்டில் பதிவான ஒட்டுமொத்த வேலை நியமன எண்ணிக்கை இரண்டாம் காலாண்டைவிட 3,400 குறைவு.
இரண்டாம் காலாண்டில் இந்தச் சரிவு 16,300ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோர் வேலையில் அமர்த்தப்படுவது வெகுவாகக் குறைந்ததே இதற்குக் காரணம்.
சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் முன்பைவிட வேகமாக வேலை கிடைத்தது.
இருப்பினும், வேலை நியமன அடிப்படையில் சில துறைகளின் மீட்சி மற்ற துறைகளைவிட மெதுவாக உள்ளதை மனிதவள அமைச்சு சுட்டியது. நிபுணத்துவச் சேவைகள், தகவல் மற்றும் தொடர்புச் சேவைகள், நிதிச் சேவைகள் ஆகிய துறைகளில் தொடர்ந்து சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வேலையில் அமர்த்தப்படுகின்றனர். இம்மூன்று துறைகளும் இவ்வாண்டிலும் அடுத்த ஆண்டிலும் பொருளியல் வளர்ச்சிக்கும் தொழிலாளர் சந்தையின் மேம்பாட்டுக்கும் தொடர்ந்து பெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்டியுசி உதவி தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே கூறினார்.

