தீவு முழுவதும் குடியிருப்புப் பேட்டைகளில் துப்புரவு சாதனக் கொட்டகைகள் அமைக்கப்படும்
சிங்கப்பூரில் பொது இடங்களைக் குப்பைக்கூளங்கள் இல்லாத தூய்மையான இடங்களாக வைத்திருக்கும் பழக்கத்தை மேலும் அதிக மக்களிடம் நிலைபெறச் செய்யும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள குடியிருப்புப் பேட்டைகளில் துப்புரவு சாதனக் கொட்டகைகள் அமைக்கப்படும்.
பொதுச் சுகாதார மன்றம் நேற்று இதனை அறிவித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய எஸ்ஜி துப்புரவு தினச் செயல்திட்டத்தை ஆண்டுக்கு நான்கு முறை இடம்பெறும் இயக்கமாக அது நீட்டித்து உள்ளது.
எஸ்ஜி துப்புரவு தினத்தன்று காலை 4 மணி முதல் நள்ளிரவு வரை பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள், பூங்கா இணைப்புப் பாதைகள், திறந்தவெளி இடங்கள், குடியிருப்புப் பேட்டை திடல்கள் ஆகியவற்றில் துப்புரவு ஊழியர்கள் பணிகளில் ஈடுபடமாட்டார்கள்.
துப்புரவு ஊழியர்கள் இல்லாவிடில் எந்த அளவுக்குக் குப்பைக்கூளங்கள் சேரும் என்பது பற்றி பொதுமக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இது இடம்பெறுகிறது.
எஸ்ஜி துப்புரவு தினம் அடுத்த ஆண்டு மாதாமாதம் இடம்பெறும் ஓர் இயக்கமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தினத்தை ஆண்டுக்கு நான்காக நீட்டிக்கும் செயல்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இம்மன்றமும் தேசிய பூங்கா கழகமும் 17 நகர மன்றங்களும் சேர்ந்து அந்தச் செயல்திட்டத்தை புக்கிட் பாத்தோக்கின் ஃபூஜி ஹில் பூங்காவில் தொடங்கின.
அந்தப் பூங்காவில் சமூக துப்புரவுச் சாதனக் கொட்டகை ஒன்றையும் மன்றம் நேற்று திறந்துவைத்தது.
அந்தச் சாதனக் கொட்டகையில் வாளி, தள்ளுவண்டிகள், குப்பைகளைப் பொறுக்கி எடுக்கும் இடுக்கிகள் போன்ற துப்புரவு சாதனங்கள் இருக்கும்.
அந்தச் சாதனங்களின் உதவியுடன் மக்கள் பொது இடங்களில் குப்பைக்கூளங்களை அகற்றி சுத்தப்படுத்தலாம்.
அத்தகைய ஏழு கொட்டகைகள் ஏற்கெனவே பொது பூங்காக்களில் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்த சில மாதங்களில் எல்லா நகர மன்றங்களிலும் அவை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பொதுச் சுகாதாரமும் துப்புரவும் மிக முக்கியம் என்பதை கொவிட்-19 வெளிச்சம் போட்டுக்காட்டி உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தீவு எங்கும் அமையும் துப்புரவு சாதனக் கொட்டகைகளில் இருக்கும் சாதனங்களை நகர மன்றங்கள் முறையாக பூச்சி மருந்து அடித்து சுத்தப்படுத்தும். குப்பைகளைச் சேகரிக்கும்போது குடிமக்கள் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். நேற்றைய நிகழ்ச்சியில் துப்புரவு ஊழியர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
நேற்று தொடங்கிய எஸ்ஜி துப்புரவு தினம் ஒரு மாத காலம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.