தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலத்தில் பல பகுதிகளிலும் தீபாவளிவரை கடும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
அந்த மாநிலத்தில் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர் மழை காரணமாக தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஏற்கெனவே கடும் மழை பெய்து வருவதும், கடும் மழை தொடர்ந்து பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டு இருப்பதும் தீபாவளி விற்பனையை, பண்டிகைக் குதூகலத்தைப் பெரிதும் பாதித்து வருவதாக பல தரப்பினரும் தெரிவிக்கிறார்கள்.
மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக் காலம் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மழை காரணமாக அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிடும் போல் தெரியவருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிக்கும் என்றும் அது அடுத்த சில நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் தீபாவளி வரை தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அது எச்சரித்துள்ளது.
தீபாவளி நாளன்று குமரி, நெல்லை, தூத்துக்குடியில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குச்செல்ல வேண்டாம் என்று மன்னார் வளைகுடா மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர கனமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கிவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

