சிங்கப்பூர் வந்தவர்களில் 1,000 பேரில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று

சிங்கப்பூர் வந்தவர்களில் 1,000 பேரில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
1b840c02-c38b-4990-a524-a2cc55c565e8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் (Vaccinated Travel Lane) சிங்கப்பூர் வந்தவர்களில் 1,000 பேரில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட தகவலில் இது தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் தொடங்கப்பட்டு எட்டு வாரங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில், செப்டமர் 8 முதல் நவம்பர் 1 வரை சிங்கப்பூர் வந்த 13,731 பயணிகளில் 14 பேருக்குத் தொற்று உறுதியானதாக ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூர் வந்த பயணிகளில் 7,702 பேர் குறுகியகால வருகையாளர்கள் அல்லது நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர். இந்தப் பிரிவினரிடையே எட்டுப் பேருக்குத் தொற்று உறுதியானது.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், 5,353 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் சிங்கப்பூர் திரும்பினர். அவர்களில் அறுவருக்குத் தொற்று உறுதியானது.

எஞ்சிய 676 பயணிகள், 12 மற்றும் அதற்குக்கீழ் வயதுடைய சிறார்கள். இந்தப் பிரிவினரிடையே எவரிடமும் தொற்று கண்டறியப்படவில்லை.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் குறுகியகால வருகையாளர்கள் அல்லது நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் அடிக்கடி தகவல் அளித்தனர்.

எனினும், சிங்கப்பூர்வாசிகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை பற்றி தகவல் வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.