சிங்கப்பூர் திரும்புவோர் தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய ஊக்குவிப்பு

சிங்கப்பூர் திரும்புவோர் தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய ஊக்குவிப்பு

2 mins read
f4366abe-c93f-42d7-9598-de3f75964684
விரைவான குடிநுழைவு அனுமதிக்கு ஏதுவாக, சிங்கப்பூர் வந்திறங்கியதும் பயணிகள் தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாடுகளில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர், சிங்கப்பூர் திரும்புமுன் தடுப்பூசிச் சான்றிதழைத் தங்களது மின்னணுச் சுகாதார உறுதிமொழி அட்டையில் பதிவேற்றம் செய்யும்படி குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஊக்குவிக்கிறது.

அந்த உறுதிமொழி அட்டையானது மின்னணு எஸ்ஜி வருகை அட்டையின் ஒரு பகுதி என்று ஆணையம் இன்று (நவம்பர் 7) வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

கொரோனா தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது, அவர்களது கொவிட்-19 தடுப்பூசி ஆவணம் தானாகவே அனுப்பப்பட்டு, அது 'ஹெல்த்ஹப்' அல்லது 'டிரேஸ்டுகெதர்' செயலியில் தோன்ற வகைசெய்யும் என்று ஆணையம் தெரிவித்தது.

அதனுடன், விரைவான குடிநுழைவு அனுமதிக்கு ஏதுவாக சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்கள் தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தவும் அது அனுமதிக்கும் என்றும் அது கூறியது.

"அப்பயணிகளின் தடுப்பூசிச் சான்றிதழ்களைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் நேரில் சரிபார்க்க வேண்டியதில்லை என்பதால் வருகைக் குடிநுழைவு முகப்புகளில் அனுமதி பெறுவது விரைவாகும்," என்று ஆணையம் தெரிவித்தது.

வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான மின்னிலக்கச் சான்றிதழை இங்கு வருமுன் பதிவேற்றம் செய்யாதோர், அச்சான்றிதழை முகப்பு அதிகாரிகளிடம் காட்டி, குடிநுழைவு அனுமதி பெற வேண்டும் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை மின்னணுச் சுகாதார உறுதிமொழி அட்டையில் பதிவேற்றம் செய்ய வேண்டியது இல்லை. அவர்களது தடுப்பூசி ஆவணங்கள் தானாகவே ஆணையத்தின் குடிநுழைவுக் கணினி அமைப்பிற்கு அனுப்பப்பட்டிருக்கும்.

"அவர்கள் இங்கு வந்திறங்கியபின் குடிநுழைவு அனுமதி பெற தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தலாம்," என்று ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்