சிங்கப்பூர் உடனான பயணத் திட்டம், விமானப் பயணத்துறையைக் கைதூக்கிவிடும் என மலேசியா எதிர்பார்ப்பு

சிங்கப்பூர் உடனான பயணத் திட்டம், விமானப் பயணத்துறையைக் கைதூக்கிவிடும் என மலேசியா எதிர்பார்ப்பு

1 mins read
6a287d60-f1a2-4be1-bcb6-595aba202e24
தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தில் பங்கேற்பதில் தான் எதிர்பார்ப்புடன் இருப்பதாக மலேசியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியா கூறியது. படம்: ராய்ட்டர்ஸ் -

கோலாலம்பூர்: சிங்கப்பூர் உடனான தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் (Vaccinated Travel Lane), மலேசியாவின் விமானப் பயணத்துறையைக் கைதூக்கிவிடும் என மலேசியா எதிர்பார்க்கிறது.

எனினும், இந்தப் பயணத் திட்டம், பொருளியலுக்கோ தனிப்பட்ட முறையில் தங்களுக்கோ பெரிய அளவில் தாக்கத்தை இப்போதைக்கு ஏற்படுத்தாது என்று தாங்கள் கருதுவதாக சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா நடத்துநர்களும் இங்கு வசிக்கும் மலேசிய ஊழியர்களும் கூறுகின்றனர்.

இந்தப் பயணத் திட்டம், விமானப் பயணத்துறையில் பணியாற்றும் மலேசியர்களுக்கு நற்செய்தியாக அமைவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நேற்று (நவம்பர் 8) கூறினார்.

கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து எல்லைகள் மூடப்பட்டிருந்ததால் விமானப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

"மற்ற ஆசியான் நாடுகளுக்கும் விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெறுகிறது," என்று டாக்டர் வீ தெரிவித்தார்.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தில் பங்கேற்பதில் தான் எதிர்பார்ப்புடன் இருப்பதாக மலேசியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது. அதுகுறித்த மேல்விவரங்கள் இறுதிப்படுத்தப்படுவதாக அது தெரிவித்தது.