ஒருங்கிணைந்த மருத்துவ திட்டம் வழங்கும் 11 காப்புறுதி நிறுவனங்களின் திட்டத்தில் அதிக மருத்துவ நிபுணர்கள் இடம்பெற உள்ளனர்.
இதனால், இந்தக் காப்புறுதித் திட்டம் வைத்திருக்கும் கிட்டத்தட்ட 2.85 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், அதிக கட்டணம் வசூ லிப்பது, தேவையில்லாத மருத்துவச் சோதனைகள், காப்புறுதித் திட்டத்தின்படி வழங்க வேண்டிய தொகை வழங்கப்படாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காப்புறுதி வாடிக்கையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவ நிலையங்கள் ஆகியோர் தங்கள் சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ சமரச அமைப்பையும் நாடலாம்.
மருத்துவ காப்புறுதி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் சுகாதார அமைச்சு இவற்றை நேற்று அறிவித்தது.
ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் காலங்காலமாக காப்புறுதி நிறுவனங்களின் மருத்துவக் குழுக்களில் போதுமான மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றிருக்கவில்லை என குறைகூறப்பட்டது.
தற்போதைய நிலையில், ஏஐஏ, அவிவா, ஏஎக்ஸ்ஏ, கிரேட் ஈஸ்டர்ன் லைவ், ஆகிய 4 காப்புறுதி நிறுவனங்கள் தங்களுடைய மருத்துவக் குழுவில் இவ்வாண்டு இறுதிக்குள் 500 மருத்துவ நிபுணர்களை கொண்டிருக்க உறுதி கூறியுள்ளன.
இதேபோல், என்டியுசி இன்கம், புருடென்ஷியல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மருத்துவக் குழுவில் குறைந்தது 450 மருத்துவ நிபுணர்கள், ராஃபிள்ஸ் ஹெல்த் இன்ஷுரன்ஸ் 250 மருத்துவ நிபுணர்களைக் கொண்டிருக்க உறுதி கூறியுள்ளன.
இதில் சில காப்புறுதி நிறுவனங்கள் ஏற்கெனவே இந்த எண்ணிக்கை யிலான மருத்துவ நிபுணர்களை தங்கள் குழுக்களில் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதித் திட்டங்கள் வைத்திருக்கும் கிட்டத்தட்ட 1.71 மில்லியன் மக்கள் தங்களுடைய காப்புறுதித் திட்டத்தில் இருக்கும் மருத்துவ நிபுணர்கள் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் பட்சத்தில் குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்தினால் போது மானது. இதன்படி, சிலர் $3,000க்கு மேல் கட்ட வேண்டியிருக்காது.
இவர்கள் சிகிச்சைக்கு காப்புறுதித் திட்ட மருத்துவக் குழுவில் அல்லாத மருத்துவரை நாடினால் இத்தகைய குறைவான கட்டணச் சலுகை அவர்களுக்கு கிடைக்காது என்பது குறிப் பிடத்தக்கது.
ஆனால், இத்தகைய ஒரு முறையில் நோயாளிகளும் அவர்களைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களும் தாங்கள் விரும்பிய மருத்துவ நிபுணரிடம் நோயாளி சிகிச்சை பெற முடியவில்லை என்ற குறை வெகுகாலமாக இருந்து வந்துள்ளது.
இதை சரிசெய்யும் வகையில் சுகாதார அமைச்சு ஏப்ரல் மாதம் பல அமைப்புகளை உள்ளடக்கிய சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதிக் குழுவை அமைத்தது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
மெடிஷீல்ட் காப்புறுதித் திட்டத்துடன் இணைந்து செயல்படும் இந்த ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தின்மூலம் ஒருவர், தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோர், தங்கள் காப்புறுதித் திட்ட ஆண்டு சந்தாவுடன் மருத்துவ சிகிச்சை கட்டணமாக சிகிச்சைக்காகும் மொத்த கட்டணத்தில் பத்து விழுக்காடு செலுத்தினால் போதுமானது.